சனி, 16 டிசம்பர், 2017

கரப்பான் பூச்சிகள்.

கரப்பான் பூச்சிகள்.
=================================================ருத்ரா இ பரமசிவன்.

எத்தனை கொடிகள்?
கொடிகளில்
எத்தனை வர்ணங்கள்?

தேதி அறிவித்தவுடனே
"ராமாயி வயதுக்கு வந்து விட்டாள்" பாணியில்
வாக்காளர் பட்டியலுக்கு
மஞ்சள் நீராட்டு.
தனி அதிகாரிகள்.
தனி ஜீப்கள்.
அதற்கப்புறம்
கொசு மருந்து அடித்தால்கூட‌
கொடுந்தண்டனை தான்.
கொடியில் கொத்துப்பூவோடு
இரண்டு இலையும் வரக்கூடாது.
கிழக்கே சூரியன்
உதிக்கும்போதெல்லாம்
அதிகாரி வந்து
கருப்புத்தாள் ஒட்டி
இருட்டடிப்பு செய்திடுவார்.
மக்கள் "ஹலோ" என்று
"கை" குலுக்க கை நீட்டினாலும்
கைகளுக்கு விலங்கு தான்.
பலசரக்குக்கடைகளில்
வசூல் ஆன "கரன்சி" நோட்டுகள் கூட‌
தன் "கற்பு"க்கு சாட்சி சொல்லியாக வேண்டும்.
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்
தேர்தல்
"பார பட்சமின்றி" நடக்கிறது
என்ற நாடகம்
நாடு முழுதும் அரங்கேற்றப்படும்.
மஞ்சள் குங்குமம் பூசி
தேங்காய் உடைத்து
கற்பூரம் கொளுத்தி
கணிப்பொறிகளும் தயார்.
பஞ்சப்படியுடனும்
பயணப்படியுடனும்
ஊழியர்கள்
வாக்காளர் பட்டியலுடன்
இங்க் பேட் ஸ்கேல் சகிதம்
அணிவகுத்து வந்திடுவார்.
கத்தி பூட்டிய துப்பாக்கிக்குழலுடன்
காவல் காரர்கள்
அந்த பெட்டியை காக்கும்
பூதமாக
பின்னால் பூட்ஸ்காலுடன்
தடதடப்பார்கள்.
நேரம் காலம் பார்த்து
பிரம்ம முகூர்த்தம் பார்த்து
வேட்பார்கள்
வாக்காளர்களிடம்
கிசுகிசுப்பார்கள்.
இலவசமாக‌
என்ன வேண்டும்?
காம‌தேனுவா?
கற்பக விருட்சமா?
இந்திர லோகமா?
வேண்டுமானால்
சட்டசபையை
உங்கள் வீட்டு
மாட்டுக்கொட்டிலுடன் கூட‌
கட்டிவைக்கத்தயார்
நீங்கள் விரும்பும் நாட்களுக்கு.
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
ஜனநாயகம் என்ற ஒரு
பாரிஜாதப் பூ இருக்கிறதாமே
எழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
அதை நாங்கள்
எடுத்து வருகிறோம்.
வாக்குப்பெட்டியை
நாங்கள் கவனித்துக்கொள்ளுகிறோம்.
பாரிஜாதப்பூ நிச்சயம் கிடைக்கும்
அப்புறம் அதை
நீங்கள் காதில் வைத்துக்கொள்ளுங்கள்.
..................
.................

மரா மரங்களூக்கிடையே
அம்புகளும் பாய‌
கூர்மை தீட்டிக்கொள்ளுகின்றன.

குறித்த நாளில்
தேவர்கள் பூமாரிப்பொழிய‌
"புதல் மறைத்து வேடுவர்களும்
புள் சிமிழ்த்தனர்."

மின்சாரத்தொண்டை மட்டுமே உள்ள‌
இதயம் இல்லாத‌
நீண்ட மைக்குகள் சாட்சியாக‌
தட்டி தட்டி முதுகு தேய்ந்த
மேஜைகளின் சாட்சியாக‌
ஒரு நவாப் நாற்காலி ஏலத்துக்கு
சும்மா ஒண்ணு ரெண்டு மூணு சொல்லும்
மற்ற‌ நாற்காலிகள் சாட்சியாக‌

அதோ சுவரில்
கம்பீரமாய் மீசையைக்க்காட்டும்
அசோகசக்கரத்து சிங்கங்கள் சாட்சியாக‌

ஜனநாயகம் ஜனங்களுக்கே
விற்கப்பட்டது
சந்தைக்கு வந்தது.

எங்கே நடந்தாலும்
எப்படி நடந்தாலும்
எப்போது நடந்தாலும்
நம் தேர்தல்
எனும் தேர் நகரும்போது
அடியில்
கரப்பான் பூச்சியாய் நசுங்குவது
"கண்ணியம் மிக்க
அந்த ஜன நாயமே."

==========================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக