வியாழன், 28 டிசம்பர், 2017

ஒரு சொர்க்கவாசல் வழியே ஒரு நரகத்திற்கு....


ஒரு சொர்க்கவாசல் வழியே ஒரு நரகத்திற்கு....
====================================================ருத்ரா

ஹரி எனும்
நாராயணனை
ஒரு தூண் பிளந்து
குடல் கிழித்து தான்
தரிசிக்கவேண்டுமா ?
ஆம்.
வேதாந்திகள் மூளைக்காட்டுக்குள்
திசைகளை தின்று விட்ட‌
அந்த அடர்ந்து காட்டுக்குள்
சிக்கித்திணறி
மாய்ந்து கிடந்தபோது
இருட்டே தான்
இன்னும் பெரிய இருட்டாய்
விசுவரூபம்  காட்டியது.

நாராயணன் எனும்
மனிதன்
நாராயணன் எனும்
இன்னொரு மனிதனுக்குள்
புகுந்து
அவன் கண்ணீரில்
அவன் சிந்தும் வியர்வைகளில்
ரத்தங்களில்
தோய்ந்து பார்ப்பதே
நாராயணீயம்.
பிரபஞ்ச உயிர்மை என்ற‌
இயற்பியல் நீச்சலின்
"போஸான் அல்லது ஃபெர்மியான்"களின்
அறிவு வெள்ளத்தில்
நீந்திக்களிப்பதே
நாம் பெறும் "மகா ஞானம்"

இன்னமும்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம்
என்று
வரப்பு கட்டும்
நம்  வடிகட்டிய முட்டாள்தனங்கள்
எரிந்து நாசமாகுவதன் ஒளியே
ஒரு சொர்க்கவாசலுக்கு
வெளிச்சம் காட்டும்.
நரன்+அயணம்..
மனிதனில் வெளிப்படு.
மனிதனில் வாழ்ந்திரு.
மனிதமே உன்
மூச்சுக்காற்று.
பாம்புப்படுக்கையல்ல அது!
அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவன் வாயில் மண்ணு
என்று பொட்டில் அறைந்து
சொன்னபோதும் கூட
மதமாச்சாரியங்களின்
போதை மழையே
நம் மண்ணின் மனங்களை
அரித்துக்கொண்டு போய்விட்டது.
கீழவெண்மணியில்
கருகிப்போன‌
அந்த நந்தனார்கள்
வேண்டியது நியாயமான கூலியே!
தில்லைக்கூத்தன் தரிசனம் அல்ல.
தீய்ந்து போன
அந்த மனிதங்களின்
அடி உரத்தில்
மின்னல் பயிர்களாய் வந்த
வெளிச்ச சிந்தனைகள்
நம் கந்தல் வானங்களுக்கு
ஒரு "கதிர் ஆடை" கட்டிவைக்கும்.
அந்த "மானிட ஆற்றலை"
கண்டு கொள்வதே
ஞானத்தின் ஞானம்.
அதை
இன்னும் சிந்தனையின்
படிக்கட்டுகளில் ஏறி
தரிசனம் செய்யாதவர்கள்
ஒரு சொர்க்கவாசல் வழியே
சென்றாலும்
நரகம்
நோக்கியே  தான் நகர்கிறார்கள்.

=======================================================


2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

எனக்கு இது இன்னும் புடிபடாத விடயமாக இருக்கிறது.
வருடம் முழுவதும் பாவத்தை செய்து விட்டு இன்று இதனுள் நுழைந்தால் அனைத்து பாவங்களும் தீரும் என்றால் தவறு செய்ய பயம் இருக்காதே...

எனது தளத்தில் கவிதை போல ஒன்று எழுதி இருக்கிறேன் ஐயா.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்புள்ள திரு கில்லர்ஜி அவர்களே

உங்கள் கவிதைப்பகுதியில் "தள்ளாத வயதினிலே" ல் பதிவான‌
கவிதை எலும்புசதை வற்றிய நிலையிலும் அந்த இருவரும் உருகிக்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவது அருமை!இளமை முறுக்கில்
இருந்தால் நான் புண்ணியம் செய்தேன் என்பதும் உடல் இற்ற நிலையில் இது நான் செய்த பாவம் என்பதும் தான் இந்திய ஃபிலாசஃபி.அதனால் தான் நம் நாட்டில் சொர்க்கவாசல்களில்
மனித ஈசல்கள்.உங்கள் கவிதைப்பதிவுகள் மிகவும் ரசனைக்கு உரியவை.

அன்புடன் ருத்ரா

(உங்கள் பகுதியில் என் மடல் இடுவது ஏற்றுக்கொள்ளப்படுகிறதா
என்பது தெரியவில்லை.அதனால் இங்கு இடுகிறேன்)

கருத்துரையிடுக