செவ்வாய், 12 டிசம்பர், 2017

12.12.17

12.12.17
=======================================ருத்ரா

அன்புக்கும் அன்பான‌
எங்கள் ரஜனி அவர்களே!
நூறாண்டுக்காலம்
நீங்கள் வாழ்க!

நீங்கள் மட்டும் அல்ல
நாங்களும் தான்
ஒரு தடவை சொன்னால்
அது நூறு தடவைகள்
சொன்ன மாதிரி!
நூறாண்டு காலம்
நீங்கள் வாழக!

வெறும் மும்பை கரிகாலனா
நீங்கள்?
தமிழ் மண்ணுக்கு
வெண்கொற்றக்குடை ஏந்தி
செங்கோல் ஏந்தி ஆளவரும்
"கரிகாற்பெருவளத்தானாக" அல்லவா
நாங்கள்
எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
காவிரிக்கு கரையெடுத்து
நீர் வளம் காத்த மாமன்னவன்
அல்லவா அவன்?
காவிரியை
பல அணைகள் மூலம்
சுருட்டிக்கொள்ளும்
சூழ்ச்சிகள் நடைபெறுகிறதே!

ஆனால்
"போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம்"
என்ற
உங்கள் "பஞ்ச்"டைலாக்
வெறும் "பஞ்ச்" ஆகி குத்தி
அந்த போர்முரசே
கிழிந்து போய்விடுமோ
என்ற அச்சமே
எங்கள் மீது கவிகிறது.

கபாலிடா நெருப்புடா
என்று
நீங்கள் தீப்பொறிகளை
பூட்ஸ்ல் பூக்கச்செய்து நடந்து
சிலிர்த்தபோது
சமூக நீதியின்நாடி நரம்புகளில் ஒரு
சரித்திரத்தின் பக்கங்கள்
சர சரக்கின்றனவே.
ஆனால் "நீட்" தேர்வு
இங்கே தீப்பற்றி எரிந்தபோது
உங்கள் இடிக்குரல்
கேட்கவில்லையே.
வழக்கமாய்
சிகரெட்டை மேலே போட்டு
கப்பென்று
வாயால் பிடித்து புகை விடுவீர்களே
அந்த புகையோடு
நாங்கள் மௌனமாக ஒன்றிவிட்டோம்.

பிறந்த நாளைக்  கொண்டாட
உங்கள் வீடு நோக்கி
வந்த ரசிகர் வெள்ளம்
நீங்கள் வீட்டில் இல்லை
என்று
திரும்பியதாய்
ஊடகங்கள்  காட்டியபோது
ஊமைத்தனமான கண்ணீர்த்துளிகள்
அங்கு
முட்டிக்கொண்டு நின்றன.

உங்கள் 67 வயது நிறைவை
இனிப்பாக்கி...
6700 கேக்குகளால்
சாலையெல்லாம் உங்களை  ஓவியமாக்கி
அகமகிழ்ந்தோமே !
தலைவா!
அது நிஜத்திலும் நிஜம்.
உங்கள்    பிறந்த நாள்
எங்களுக்கு
ஆயிரமாயிரம் தீபாவளிகள்!

டிவி ஊடகங்களில்
உங்கள்  அரசியல் புயல்
கருமையம் கொள்வது பற்றி
ஒரு இனிய பிரசவவலியின்
இன்பப்பிரளயம் பொங்கும்
என்று
காத்திருந்தால்
இதுவரை நீங்கள்
நடந்த சினிமா காற்சுவடுகளின்
ஒட்டுப்படங்களை  ஓட்டி
அவை
தன் "ஹிட் ரேட்டை " மட்டும்
தக்கவைத்துக்கொண்டனவே.

உங்கள் ஆத்மீக வாதம்
எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
இமயமலை பாபாவையும்
ராகவேந்திரரையும் நீங்கள்
எங்களுக்கு காட்டும்போது
அவர்கள்
மத நல்லிணக்கமும் மனித நீதியும்
காக்கும் "உருவகங்களாகத்தான்"
இருந்தார்கள்.
அப்போது உங்கள் கையில்
ஆத்மீகம் கூட சமூகநீதியைக்
காக்கும் "சிவாஜியின்" வாள் ஆகத்தான்
தெரிந்தது.
அந்த வாளுக்கு "மஞ்சள் குங்கும"
வெறி பூசி கொச்சைப் படுத்தி
விடமாட்டீர்கள் என்று
மெய்யாலுமே
ஆம்
மெய்யாலுமேதான்
நம்புகிறோம் !
வாழ்க எங்கள் ரஜனி!
நீடூழி நீடூழி
வாழ்க எங்கள் ரஜனி!

====================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக