செவ்வாய், 19 டிசம்பர், 2017

நான் எங்கே?

நான் எங்கே?
==============================================ருத்ரா

அந்த புல்கற்றைகளினூடே
கால்விரல் நுழைத்து நடக்கின்றேன்.
ஆகாயத்தின் மேகப்பஞ்சுகளின்
பிசிறுகளை
மூக்கிலும் கண்ணிலும்
ஏந்திக்கொண்டு நடக்கின்றேன்.
நட்சத்திரங்களை பொடி செய்து
காலின் கீழ்
யார் இந்த கோலம் போட்டார்கள்?
ஊசிக்குருவிகளும் தேன்சிட்டுகளும்
என் அக்குள் இடைவெளிக்குள்
சிறகுத்துடிப்புகளை
கவிதையாக்கி விட்டு
தம் விடைதெரியாத கேள்விகளுக்குள்
அந்த கீழ்வானத்தில்
வீழ்கின்றன.
தட்டாம்பூச்சிகளின்
கிர்ரென்னும் சிறகுகள்
என் செவிமடல்களில்
போதை ஏற்றுகின்றன.
பளிங்கு நொறுங்கினாற்போன்ற‌
அந்த சிறகுப்படலங்களில்
படுத்துக்கொண்டு
என் எதிர்ப்படும்
எல்லா யுகங்களையும்
எட்டி உதைக்கின்றேன்.
வண்ணத்துப்பூச்சியின்
சிறகு மடிப்புகள்
என்னைக்கவ்விக்கொண்டு
பிக்காஸோவையும்
ரவிவர்மாவையும்
என் ரத்தக்குழம்புக்குள்
வானவில் விளாறுகளாய்
விசிறியடிக்கின்றன.
தூரத்தில்..
மிக மிக தூரத்தில்..
பனிவிழுதுகள் நெய்த ஆடையை
முண்டாசுகட்டிய‌
பன்மலை அடுக்கங்கள்
எதையோ
மௌனமாய் எதிரொலிக்கின்றன.
பச்சைஇலைக்குடைக்குள்
மரத்தின்
பருத்த தொடைகளில்
மண்ணின் நரம்புகள்
கண்ணாடி இழைகளாய்
நெளிகின்றன.
விடி வானமா? அந்தி வானமா?
நீலக்கடலின் நுரை ஜரிகைக்கம்பளத்தில்
கிண்ணம் கவிழ்ந்து
சிவப்பு ஒயின் சித்திரச்சிதறலாய்
தெறிக்கிறது
தெளிக்கிறது
வெறிக்கிறது
விழிக்கோளங்கள்
நீள நீள விழிக்கின்றன.
எல்லாமாய் எனக்கு தெரிவது
ரசம் பிழியும் அல்லது வழியும்
இனிய இரண்டு உதடுகள்.
நான் எங்கே?
கரைந்து போய்விட்டேன்.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக