திங்கள், 4 டிசம்பர், 2017

சந்திர மண்டலத்தில் "பிளாட்டு"கள்

 சந்திர மண்டலத்தில் "பிளாட்டு"கள் 
==============================================ருத்ரா 



ஒரு பனைமரம் ஏறு.
கள் குடிக்க அல்ல.
அங்கிருந்து உனக்கு  
ஒரு பறவைப்பார்வை கிடைக்குமே!

கீழே இருந்த 
குத்து வெட்டுகள்
வெறும் பூச்சிகள் பறத்தல்கள்.
கிருஷ்ணனின் விஸ்வரூபம் கூட‌
பையாஸ்கோப்பு பூச்சாண்டிகள்.
பெரிய பங்களாவுக்கும் மேல்
உன் கால்கள்.
உன் காதுகளில்
கூர்மையாய் மொட மொடத்துக்கேட்கும்
பனைஓலை சளசளப்புகள்.
அவை வெறும்
ஓசைப்பிழம்புகள் அல்ல.
பூணூல் போடாமலே
உனக்கு ஒரு பிரம்மோபதேசம்
கேட்கிறது பார்.
அடி அடியாய் ஏறினாயே
ஒரு நம்பிக்கையை
ஆலிங்கனம் செய்துகொண்டு!
உயரத்தின்
அச்சமும் கூச்சமும்
அகன்று போனதல்லவா?
விட்டால்
நொறுங்கிப்போவோம்
என்ற உணர்வு
உயிருக்குள்
இன்னொரு உயிராய்
கரு தரித்த பிரசவத்தை
ஓர்மைப்படுத்தியது அல்லவா?
இது போதும்.
நீ சந்திர மண்டலத்தில்
"பிளாட்டு"கள் வாங்கிப்போட!

சர சர வென்று
இறங்குவது இருக்கட்டும்.
இப்போதாவது புரிந்து கொண்டாயா?
உன் முதுகில் ஒரு வண்டிப்பாரம்
பச்சைக்குதிரை ஏறிக்கொண்டிருப்பதை...

சாதி மத சம்ப்ரதாயங்கள்
டிவிக்களின் அழுக்குமூட்டைகள்
சினிமாவின் நிழலின் பாறைகள்
எல்லாம் சேர்ந்து
உன்னை அழுத்திக்கொண்டிருப்பதை....

அரசியல் ஆணவக்காரர்களின்
கண்ணுக்குத் தெரியாத‌
அரசியல் சட்டக்கண்களுக்குள்
மண்ணைத்தூவி விட்டு
உன்னை சாண‌க்கியச்சவுக்குகளால்
அடித்து துவைத்துக்கொண்டிருப்பதை....

சரி!
இப்போதாவது புரிந்து கொண்டிருப்பாயே
நீ ஓட்டுப்போட்டும் 
அந்த கணிப்பொறி சிலேட்டு
வெறுமையாய்
அவர்கள் கையில்
அவர்கள் இஷ்டத்துக்கு
எழுதப்பட்டுகொண்டிருப்பதை...

எப்போதுமே 
உனக்கு ஒரு உயரம் வேண்டும்
இந்த அடாவடி கொலுக்காட்சிகளை
துல்லியமாகக் கண்டு கொள்ள...
திட ரூபமான பார்வை வேண்டும்.
திட்டவட்டமான அறிவியல் பார்வை வேண்டும்.
சமுதாய சம்பவங்களின்
நேரடியான ஊசிமுனைகள் 
உன் மீது குத்தி
அக்கு பஞ்சர் செய்யவேண்டும்.
அப்போது விழிப்பின் புருவமத்தியில்
உனக்கு ஒரு செவ்வானம் தோன்றும்.
இதற்கும் கூட‌
விண்வெளியில் மிதக்கும்
ஹப்பிள் டெலஸ்கோப் வேண்டும்.
அப்போது தான்
இவர்களின் சூலாயுதங்களும் வேலாயுதங்களும்
சாதி அரக்கர்களுக்கு கவசமாக நிற்புது
புரியும் தெளியும்.
மானிட நீதி வெளிச்சம் தேடுபவர்களே
இதை
புரிந்துகொள்ளுங்கள்!
தெளிந்து கொள்ளுங்கள்!

==================================================
17.08.2016 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக