வெள்ளி, 8 டிசம்பர், 2017

கமலின் சாசனம் (3)

கமலின் சாசனம் (3)
=========================================ருத்ரா

கமல் அவர்களே!
சோடாப்புட்டி கண்ணாடியில்லாமல்
ஜோல்னாப்பை இல்லாமல்
அந்த கோடம்பாக்கத்து
தீவுகளிலும்
நீங்கள்
ஒரு அறிவு ஜீவியாக‌
அலைந்து கொண்டு
இப்படி
அரசியல் தெருக்களில்
"ஆயிரம் வாலா"க்களை
வெடித்து
வேடிக்கை பார்த்துக்கொண்டே
நடப்பது
அந்த "அன்பே சிவ"த்தில்
முக நரம்புகள்
கோணி நெளிந்து
உட் கனலும் சமுதாயப்ரக்ஞையை
அந்தியா விடியலா
என்று தெரிந்து கொள்ளமுடியாத‌
ஒரு ஊமைச்சிவப்பில்
ஊர்ந்து செல்லும் கதாநாயகனையே
என் கண் முன் நிறுத்துகிறது.

ஆனந்த விகடனில்
நீங்கள் காட்டிய‌
எழுத்தாளர்கள்
அத்தனை பேரும் வைரங்கள்.
அவற்றினுள்
பட்டைதீட்டப்பட்டிருக்கும்
கோணங்களில்
ஒளிரும் கீற்றுகள்
எல்லாம்
டாஸ் காபிடல் எழுதிய‌
அந்த மாபெரும் எழுத்தாளரின்
காலடிகளை ஒற்றியோ
இல்லை
காலடிகளை வாரிவிட்டோ தான்
கசிந்திருக்கும்!
அவர்கள்
ஊதும் எக்காளங்களில்
தனி மனித ஏக்கங்களும் எழுச்சிகளும்
நிறைந்து இருக்கும்.
பொதுவுடைமை என்பது
மிக மோசமான கெட்டவார்த்தை
என்று
எழுத்துக்களின்
ஜிகினா அலங்கரிப்புகளுடன்
இலக்கியம் படைத்தவர்களே
அதிகம்.
எழுத்துக்களில்
முற்போக்கு என்று
முத்திரை விழும்போது
அவை
குப்பைக்கூடையின்
கர்ப்பப்பைக்குள்
விழுந்து
அப்புறம் அந்த கர்ப்பமும்
கலைந்தே போகலாம்.

ஆனாலும்
கமல் அவர்களே!
நீங்கள்
உங்கள் காலண்டரில்
இந்த "ஜன"வரிகளுக்குள்"
அந்த‌
"அக்டோபர்களை"யும்
"நவம்பர்களை"யும்
வர்ணம் தீட்ட முடியுமா?

நான்கு வர்ணத்தில்
தோய்ந்து கிடக்கும்
நம் "ஆகஸ்டுகளே"
இன்னொரு விடியலுக்கு
ஏங்கித்தான் ஆகவேண்டும்
என்று
ஆணி அடித்தாற்போல்
நீங்கள்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
எழுதுவது கூட‌
இந்த கால கட்டத்திற்கு
மிகவும் வேண்டியதாக இருக்கிறது.
அங்கே
வேடிக்கைகளைப்பாருங்கள்!
புதிதாய் ஜல்லி பரப்பி
தார் கொட்டி
அந்த "கணினிப்பொறி"
வரைக்குமாவது
ரோடு கொஞ்சம் சுத்தப்படட்டும் என்று
புதுப்பாதை வடிக்கும்
தேர்தல் ஆணையத்தின் பணிகள்
என்பது
நம் பெருங்கனவின்
"மினி" கனவு தான்!
நீங்கள் இன்னும் அந்த‌
கடலின் கரையில் தான்
நின்று கொண்டிருக்கிறீர்களா?
தெரியவில்லை!
தேர்தல்களின்
அம்பத்தொன்று விழுக்காடு ஓட்டுகள்
என்பது
அரைக்கிணறு தாண்டுவது தான்
என்றாலும்
அந்த சருக்கல்களில்
ஜனநாயகம் என்பதும்
ஒரு சர்வாதிகாரத்தின் உள்ளடக்கமாகி
இங்கு அவலங்களே
நடைமுறையாகி விடுவது
நிச்சயம் துடைக்கப்பட வேண்டியதே!
ஆர்.கே நகரில்
அப்படி ஒரு பிஞ்சுப்புயல் வரும்
என்று
நாம் நம்ப வேண்டும் என்பதே "விதி"
அது வெற்றி பெற‌
நாம் வாழ்த்துவோம்.

=========================================================









2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

பதிவை இரசித்தேன் ஐயா அருமை
-கில்லர்ஜி

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

உங்கள் ரசிப்புக்கு மிகவும் நன்றி திரு கில்லர்ஜி அவர்களே.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக