வெள்ளி, 24 ஏப்ரல், 2026

நிகழ்வுகள்

 


நிகழ்வுகள்

______________________________________



ப்ரோ

ஒரு மாத்தம் வேணும் ப்ரோ.

இவிய்ங்க அடிக்கிற‌

ஊழல் காசுகள்ளை

இந்தியாவுக்கு பட்ஜெட்டே

போட்ரலாம்.

தொட்டில்ல தூங்கிகிட்டு

இருக்கிற‌

இவிய்ங்க கொள்ளுப்பேரந்தான்

வரப்போகிற முகலமைச்சரு..

இந்த சமூக நீதிக்குத்தான்

இப்டி

ஓட்டுகள பொறுக்குறானுக..

மல்டி பீஸ் வண்ணச்சட்டைகளும்

ஸ்லோகன்களை கர்ஜிக்கும்

டி ஷர்ட்டுகளும்

கோரஸ்களில்

எரியும் கோஷங்களாக‌

வானத்தில் முட்டிக்கொண்டே

இருக்கத்தான் செய்கின்றன.

இவை தேவையா?

காலத்தின் கட்டாயமா?

ஆம்.

எல்லாம் தான்.

நொடிக்கு நொடி

மின்சாரக்கம்பங்கள் என்றாலும்

சாலையோரத்து

புங்க மரக்கூட்டங்கள் என்றாலும்

பைக்குகளின்

புகை உமிழும் குழல்கள்

என்றாலும்

நாலு வே

ஆறு வே ரோடுகளானாலும் சரி

சூடு பொறுக்கவே முடியாத‌

அத்தியாயங்கள்

எழுதப்பட்டுக்கொண்டு தான்

இருக்கின்றன.

நியாயங்களும் நீதிகளும்

ஆடி ஆடி அடங்கும் தராசுத்தட்டுகளாய்

காட்சிப்படுகின்றன.

தடம் புரட்ட வருபவை

முகமூடிகள் அல்லது போலிகள்

என்று

சூ ச்ச்சூ என்று

காக்காய்கள் விரட்ட முடியாது.

நெருக்கடிகளும் அழுத்தங்களும்

எப்போதும்

எல்லா ஊடகங்களுக்குமே

தீனிகள் தான் 

அல்லது பாப் கார்ன்கள் தான்.

சித்தாந்தங்கள் 

எப்போதும்

சாணை தீட்டப்பட வேண்டியவையே!

நேற்றைய இன்றைய நாளைய‌

ப்ரோக்களே

அல்லது

புறாக்களே...

சிறகுகளின் படபடப்புகளில்

யுகங்கள் 

உதிர்கின்றன‌

பிஞ்சு இறக்கைகளாய்

தூசி மின்னல்களாய்

சில்லறை சில்லறையாய்

சில்லிடும்

சூறாவளிகளாய்..

பஞ்சு டைலாக்குகளிலும்

பற்றி எரியும் சாளரங்கள் தான்.

விழிகள் தெறிக்கும் 

மைல் கற்கள் தான்.

நிழலாடும் மேகக்கூட்டங்களும் தான்.

வரலாறுகளுக்கு

நிகழ்வுகள் முக்கியமல்ல.

நிகழும் தருணங்களின்

கொதிக்கும் கடிகார முட்துடிப்புகளே

போதும்.

__________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக