திங்கள், 6 ஏப்ரல், 2026

அந்த "ஃபேன்"...

 


என் அறையில்

வெறுமே 

சுற்றிக்கொண்டிருக்கிறது

அந்த "ஃபேன்"...

கூச்சல் கிளப்பவில்லை.

கார் மீது பாய்ந்து

முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு

உள்ளே போய்

ஃப்லையிங் கிஸ் வாங்கவில்லை

செல்ஃபீகளுக்கு மொய்க்கவில்லை.

இன்றைக்கே 

தன் கதாநாயக வடிவத்தை

அப்படியே கடித்து விழுங்கிவிட வேண்டும்

என்று பதறவில்லை...துடிக்கவில்லை.

பவுன்ஸர்கள் கைகளில் அள்ளி

குப்பையாக வீசிய போதிலும்

மனம் கலங்கவில்லை.

ஆங்கிலப்படங்களில் திகில் ஊட்டும்

வைரஸ் "சோம்பிகளாய்"

படையெடுக்க வில்லை.

இரண்டாவது "எம் ஜி ஆர்"எனும்

வெட்டுக்கிளிகளின் புயலா இந்த‌

ஜென்ஸி.

பிரெஞ்சு புரட்சியின்

கில்லட்டின்களா இவை?

வானமும் வேண்டாம்

விடியலும் வேண்டாம்

வெட்டிச்சாயுங்களடா

இந்த சித்தாந்தக் கரப்பான் பூச்சிகளை

எனும்

"வெறி ஆற்றின் வெள்ளோட்டங்களா இவை?

மக்கள் புற்றீசல்கள் அல்ல.

புயல்களின் கருப்பைக் கொத்துக்கள் இவை.

ஏதோ

எங்கோ இருந்து

இந்த கொப்புளிப்புகள்.

வழக்கமாய் சொல்லும்

இல்லுமினாட்டிகளின் கிலுகிலுப்பைகளா

இவை?

கனவுகளின் இமைகளுக்குள்ளா

இத்தனை அக்கினி வெள்ளம்?

என் அறையின் ஃபேன்

தட்டாப்பூச்சி போல் சிறகு அதிர்க்கின்றது.

சாதுவாய் பஞ்சுமிட்டாய்

கேட்டு சுற்றுகிறது.

____________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக