என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!
__________________________________________
கூட்டம் கூடுது
லட்சக்கணக்காய்.
கழுகுப்பார்வையில்
காக்காய் இறகுகளோ
லட்ச லட்சமாய்.
கிரீடம் யாருக்கு?
முறுக்கிய ரத்தங்கள்.
துரத்திய வயதுகள்.
ஓரங்கட்டப்பட்ட
எண்ணெய் போட வேண்டிய
லொட லொடத்த
காயலாங்கடை அடி சரக்குகள்
ஆனாலும்
அவற்றின் ஆழ் கிணற்று
எரிவாயுக்கனவுகள்.
சலுகைகள்
சலங்கை கட்டி ஆடும்
விளம்பரங்கள்.
விடலைகளின் பேரலைகள்.
விட்டுத்தள்ளுங்கள்
என்று
கடந்து போக முடியாத
சந்திப்புகளின்
சந்தடி இரைச்சல்கள்.
மீட்க வந்ததாய்
மீட்ட வந்த
சங்கீத நரம்புகள்.
சாதி நச்சுகளில்
செத்துக்கிடக்கும்
சிந்தனைச் சவங்களை
தானே
தூக்கிச்சுமக்கும்
தற்குறித்தனங்கள்.
இவையெல்லாமா
அந்த
கணிப்பொறிக்குள்
விடியலை
தூண்டில் வீசி பிடித்திடுமா?
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!
இருட்டையே தின்று கிடக்கும்
சித்தாந்தங்களின்
சில்லறைச்சத்தங்கள்
ஓயட்டுமே
ஒழியட்டுமே!
புதுச் சிந்தனை
வாளெடுத்து வீசி
வந்திடட்டுமே.
இந்த அரக்கங்கள்
வீழ்ந்து மறையட்டுமே!
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக