தேரோட்டம் தான்.
புழுதி கிளப்பிக்கொண்டு
கொட்டு முழக்கி
வடம் பிடித்து இழுத்து...
நூற்றாண்டுகள் நூற்றாண்டுகள் என்று
எத்தனை இழுத்திருப்போம்?
இன்னும்
அந்த அலங்காரத்துள்
பொதிந்து வைக்கப்பட்டவன்
முகம் தெரியுமா?
அகம் தெரியுமா?
புராணம் மட்டும்
சவ்வு மிட்டாய் மாதிரி
இழுத்து இழுத்து
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நம்மைப்போல
குழந்தை குட்டிகளுடன்
சண்டை சச்சரவுகளுடன்
ஏன்
சக்களத்திச்சண்டைகளுடன்
வேத கோஷங்கள் முழங்க
புகைமூட்டத்துள்
புதைந்து கிடக்கின்ற
தெய்வங்களை
இழுத்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த சந்துகள் பக்கம் வேண்டாம்.
இந்த சாதிகள்..
காற்று கூட படவேண்டாம்.
பார்த்து பார்த்து..
சக்கிரதையாய்
வடம்பிடியுங்கள்.
ஒரு பரமார்த்த குரு சொன்னான்
எதைச்செய்தாலும்
சேர்ந்து செய்யுங்கள்.
ஆம்.
ஒரு ஊசியை எடுத்துக்கொண்டு வாருங்கள்.
அவருக்கு தைக்க வேண்டுமாம்.
சீடர்கள் என்ன செய்தார்கள்?
ஒரு பனங்கட்டையில்
அந்த ஊசியை குத்திவைத்து
எல்லோருமாய்
இழுத்துக்கொண்டு செல்கிறோம்.
நாமும்
எக்கி எக்கி பார்க்கிறோம்.
எந்த முகமும்
தெரியவில்லை.
_________________________________________________
இபியெஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக