செவ்வாய், 14 ஏப்ரல், 2026

கூழாங்கல் அல்ல உன் இமயம்!

 



இளைஞனே!

உன் சினிமாக்கள்

படுக்கையறை நெட்ஃப்ளிக்ஸ்களில்

பற்றி எரிகின்ற‌

நைல் நதிகளை நெளிய‌

விட்டிருக்கின்றன.

காதலுக்கும் நட்புக்கும் 

இடையே தீயின் கொழுந்துகள்

சுவர் கட்டிக்கொண்டன.

உன் சித்தாந்தங்கள்

எந்த வரலாற்றையும் திருப்பிப்பார்க்கவோ

அதன் மெய்த்த‌ன்மையின் கற்பை

கட்டிக்காகவோ

முனைவதில்லை.

முனைந்ததில்லை.

அறிவின் உச்சம்

எல்லா பிரபஞ்சங்களையும்

நொறுக்கிக்கொண்டு உயர்வதில்

நீயும் அதனை விடவும் 

உயர்ந்து சுடர்கிறாய்

என்பதிலும் இங்கு யாருக்கும் ஐயமில்லை.

ஆனாலும்

அது எந்த ஹார்மோன்கள்

உன்னை

ட்ரான்ஸ்ஃபார்மர்கள் மீது

ஏறச்சொல்கின்றன?

கோபத்தின் அமில வெள்ளத்தை

உன் எந்த டி என் ஏ..ஆர் என் ஏ சங்கிலி

பீய்ச்சி அடிக்கிறது

இந்த சமுதாய மானிடத்தின் மீது?

இந்த மானிட உந்துதலின் டைனாமிக்ஸ்

கேவலம்

சினிமாவின் அரிதாரக்கிடங்கிலா

அவிந்து போவது?

இயற்கையான காதலின் காட்டாறு கூட‌

ஒரு சமூகப்பாலியல் கரையின் ஓரம்

மனித மின்னல் பாய்ச்சல்களில்

மையம் கொள்ளுமே.

உன் மையத்தையே

கழற்றி வீசியெறிந்து

உள்ளிருந்து வெளிக்கிளம்பும்

ஈவில் கண்டெண்ட் ஒன்று

மொத்த மானிடத்தையே

கசாப்பு செய்யத்துள்ளிக்குதிக்கும்

மந்தை வன்மம்

எப்படி எகிறியது?

இந்த சமுதாயம் ஒரு நோக்கத்தோடு

செதுக்கப்படக்கூடாது

என கங்கணம் கட்டிக்கொண்ட‌

வெறித்தீ எப்படி

உன் மீது சூழ்ச்சிக்கூடு கட்டியது?

ஆம்...

மீண்டும் மீண்டும்

ஆழமாய் கூர்மையாய்

நீ சிந்திக்க வேண்டும்?

எத்தனை குழப்பங்கள் 

கருத்துக்களின்

கற்பனைகளின் போதைக்குள்

பொதிந்து கிடந்தாலும்

முரண்பாடுகளின் கர்ப்பங்கள் தரித்த‌

பொருள் முதல் வாதத்தின்

ஆணிவேரை பிடுங்கி எறிந்து கொண்டு

எந்த சமுதாயத்தை நீ

கட்டமைக்கப்போகிறாய்..?

கானல் நீர் வெள்ளத்துள்

மாயையின் எதிர்நீச்சலுக்காக

கரைந்து போகாதே!

கனல் தெறித்த கனவுகளை விட்டு

மத்தாப்பு வனங்களுக்குள்

மடிந்து போகாதே!

சிந்தனை செய்...சிந்தனை செய்..

இளைய புயலே!

கூழாங்கல் அல்ல உன் இமயம்!

_____________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக