சாத்தான் குளம்
___________________________________________
இந்த மரணங்களின்
உள்ளே
ஓலமிட்டுக்கொண்டே
வெறி வளர்த்த
அந்த சாத்தான்கள் யார்?
குற்றம்
தண்டனை
தீர்ப்பு
இவை நம்
சமுதாயத்தின்
அடி நிழல்கள்.
அந்த நிழல்களின் முகங்கள்
முகங்கொடுத்து
ஒரு வட்டமேசையில் உட்கார்ந்து
பழைய ஏற்பாடுகளுக்கும்
பழைய ஏற்பாடாய்
அல்லது
புதிய ஏற்பாடுகளுக்கும்
புதிய ஏற்பாடாய்
அல்லது
ஏதோ அந்த
வேதமும் கீதையும்
கலந்து பிசைந்த
வர்ண விகாரங்களின்
வர்ண அவர்ண கோட்பாடுகளாய்
மானிடவியல் சாராம்சங்களை
எங்கோ எப்படியோ
புதைய விட்டு
மக்கிப்போனபின்னும்
எதோ
துளிர் விட்டிருக்கிறதே!
மரணங்களை
மரணங்களே
பாய்ந்து பிராண்டி
குதறிக்கொண்டு
என்ன வசனத்தை
இங்கு
வாசித்துக்கொண்டிருக்க முடியும்?
இது
நம் கோவில்களும் கடவுள்களும்
வழிபாடுகளும்
குப்புற கவிழ்ந்து விட்டதை
நிமிர்த்திவைக்க இயலுமா?
இல்லை
சிலுவை மரங்களும்
கழு மரங்களும் தான்
மீண்டும் மீண்டும்
பேய்க்காடுகளாய்
நம் வரலாற்று வடுக்களை
குத்திக்கிழித்துக்கொண்டிருக்குமா?
நுட்பமாய்
இது முரண்பாடுகளின் முரண்பாடுகளான
சமுதாயச் சித்திரங்களே!
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக