புதன், 15 ஏப்ரல், 2026

யுகசிற்பியனின் கவிதை

 

யுகசிற்பியனின் கவிதை

______________________________________


முப்பது நாப்பது களில்

இப்படி கூட்டம் திரண்டபோது

கொழுப்பெடுத்த பயலுக‌

சும்மாக் கெடக்க மாட்டாங்க...

வெள்ளக்காரங்க 

என்ன வெல்லாம் நமக்கு

செஞ்சுருக்காங்க?

என்று புலம்பினார்கள்.

அம்பதுகளில்

இப்ப நம்ம ஆட்சி தான்.

பப்பர்மெண்ட்லாம் குடுத்து

கொடியேத்தி

பாடுராங்க..

அப்பவும்பாருங்க‌

இவனுக‌

கொடி பிடிச்சு கோஷம்

போட்டுகிட்டு...

முகாரிப்பாட்டு 

மறுபடியும்.

இங்கு 

மொழி தனிமனித மரியாதை

என்றெல்லாம்

கூட்டம் வெள்ளமெனத்திரண்ட போது

ஆட்சி செய்த எளிய மனிதரை

தடம்புரட்டினார்கள்.

அப்போது

அவர்கள் "விஷக்கிருமிகள்" ஆனார்கள்.

அதன் பிறகு

உள் விவகாரம்.

தன் மகன் அந்த பெரிய நடிகர் போல்

நடிக்கிறானே..

இனி என்ன செய்யலாம்

என்ற எண்ணஓட்டங்கள் ஓடியபோது

வடக்கத்தியவர்கள்

தென்னகத்துக் குரல் ஒடுக்க‌

எண்ணிய போது

வருமான வரித் துருப்புச்சீட்டு

வாகாய் வந்தது.

வடக்காவது..தெற்காவது?

தமிழாவது? ஆரியமாவது?

கவிழ்த்தவர்கள் தந்த‌

தொப்பி கருப்புக்கண்ணாடி

விடிந்த சூரியனையே குருடாக்கியது.

அந்த அரிதாரம்

இந்த பத்து அவதாரப் பக்தியைக்கூட‌

தூக்கி விழுங்கி விட்டது.

சாதியத்தின் அடி நிலையை

மேல் தட்டு

நசுக்கியே தின்றது சூழ்ச்சி.

அப்போது அந்த சூழ்ச்சியை

மிக மிகப்பிரமாண்ட சினிமாவாக‌

ஆக்கியது

இந்த மந்தைகளின் காட்டாறு.

அப்போது அடி மண்ணில் 

புதைந்து போன‌

தமிழும் மொழியும்

அந்த வரலாற்றுப்பஞ்ச தந்திர‌

சதிக்குள் வீழ்ந்து போக‌

இந்த அப்பாவி வெறி வெள்ளமே

ஒரு பெரும் காரணம்.

அது போல் தான்

மீண்டும் வயதுகளின்

சூறாவளிக்கொடுங்காற்று.

மீசை பதியா

பால் முகங்களும்

பேரழிவுப்பிரளயங்களாய்

மின்சாரக்கம்பங்களைக்கூட‌

பிடுங்கி வாளேந்தி

யுத்தம் செய்யக்கிளம்பி விட்டன.

சாதிவெறியை மதத்தின் 

சல்லாத்துணி போர்த்திய‌

தீப்பந்தங்களுடன்

ஜெயிக்க வைக்க அந்த‌

இருட்டு சித்தாந்தங்களும்

வாய்க்கால் வெட்டின.

இப்போதும்

தமிழும் மொழியும்

தடம் அழிந்து இடம் மறந்து

காக்காய் இறகுகளாய்

பிய்ந்து சிதறி விழத்தொடங்கி விட்டது.

முதிய வயதுகள்

முதுகொடிந்து வீழட்டும்.

இளைய சிறகுகள்

பட படத்து

ரத்த மழை கூட‌

பெய்யட்டும்.

எல்லாம் சினிமா என்று

பாப்கார்ன் கொறித்து

வேடிக்கை பார்ப்போமாக‌

அல்லது

அந்த நாமும் 

அந்த‌

கார்க்கண்ணாடி உடைத்து

நொறுக்கி

அந்த அரிதாரச்செல்வனுக்கு

முத்த மழை பொழிவோமாக!

அரிஸ்ட்டாட்டில்கள் கிடக்கட்டும்.

இந்த ரஸ்புடீன்களே

நமது ரசகுல்லாக்கள்!


__________________________________________

யுக சிற்பியன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக