24 02 2026
ஸ்டோரிகள்
நீ என்னவேணாலும் எழுது.
எறும்புகள் வாசிக்குதுன்னு சொல்லு.
தூரத்து சன்னல்கம்பிகள்
தங்கக்குழம்பாய் உருகி வழிந்து
ரோடு போட வச்சிருக்கிற
ஜல்லிப்பரல்களில்
சவ்வூடு பரவுதுன்னு
சட்டையக் கழட்டிப்பாரு.
எழுத்து வார்ப்புக்குள்ளே எல்லாம்
யாரோ இருமுறாங்கன்னு
ஸ்டெத் வச்சுக்கேளு.
முத்த சலங்கைகளைக் கோத்து
வீசுகின்ற
நிலாப்பிஞ்சுகள்
நெரடிக்கிட்டே இருக்குன்னு
தேடு...தேடு..
இந்த தேட்டையை எல்லாம்
காகிதக்கசக்கல்களில்
மை ரத்தம் பாய்ச்சி
நீலவானக்கப்பில்
ஊத்தி ஊத்தி ஆத்தி ஆத்திக்
குடி.
___________________________________
சொற்கீரன்
.அவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்.
அம்மாவின் நூல் கண்டு டப்பாவில்
இரண்டு கண்ணாடி கோலிகள்.
ஒன்று நீலம், இன்னொன்று பச்சையாக.
' அம்மா நீ என்ன கோலி விளையாடுவாயா,?'
அம்மாவிடம் கேட்டான்.
அம்மா சொன்னாள்
' எனக்குக் கோலி பிடிக்கும் . உலகம் போல உருண்டை அல்லவா அது'
'அப்புறம் ஏன் இரண்டு?'
அவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.
அம்மா அவன் சிகையைக் கோதினாள்.
கண்ணீர் கசியும் குரலில் சொன்னாள்
' உனக்குப் புரியாது.
எல்லா அம்மாக்களுக்கும் உண்டு்
இரண்டிரண்டு உலகங்கள்'.
____________________________________________________________________________
எட்டாங்கிளாஸ் வகுப்பில்
ஒளிமுறிவு பற்றி
படத்துடன் விளக்கினார்
சையன்ஸ் சார்வாள்.
எனக்கு ஆச்சரியம்.
தினம் தினம் எங்கள் வீட்டுச்
சன்னல் நிழல்களில்
அந்த சூரியன்
முறுக்கை
நொறுக்கிப்போட்டு நொறுக்கிப்போட்டு
காப்பிக்குடிக்குதா என்ன?
மில்லியன் டிகிரி வெப்பக்குழம்பில்
ஆவி பறக்க ஆவி பறக்க
மண்டி விட்டு
என்னத்தை இங்கு எழுதுகிறது?
அம்மாவின் கடுகு டப்பாவுக்குள்
அவள் தாளிக்காத சொப்பனங்கள்
என்றா?
______________________________________
சொற்கீரன்
அப்படித்தான்
கல்லிடைக்குறிச்சியிலிருந்து
லீவுக்கு பெரியம்மா வீட்டுக்கு
கிளம்பும் ரயில்
கோரையாத்துப் பாலம் தாண்டி
சேர்மாதேவி சலங்கை கத்திப்பாலமும்
தாண்டி
பாலஸ் டி வேல்ஸ் டாக்கீஸ்
ரெயில் கிராஸ்ஸிங்கும் தாண்டி
அந்த சிந்துபூந்துறை
தெரு முக்கில்
செய்யது பீடி கம்பெனியை வந்து
முட்டும்.
லீவு...ஜாலி தான்.
______________________________________
சொற்கீரன்
அடையாளமாக
இப்படிச் சொல்வோம்
'எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு புங்கை மரமும் கொன்றை மரமும் இருக்கும்'.
இப்படிக் கேட்டார் ஒருவர்.
'ஒரு புங்கை மரத்துக்கும் கொன்றை மரத்துக்கும் பக்கத்தில் இருக்கிற வீடுதானே உங்களுடையது?'
சரி என்பது
சரியின் பக்கத்தில் இருப்பது .
Feed posts
சீனி சேட் லாரி ஆபீஸ் முன்னால் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
வியர்த்துச் சட்டை உடம்போடு ஒட்டியிருந்தது.மூன்று பித்தான்கள் திறந்த மார்பு. பேசியபடியே இடக்கை மடக்கிக் கழுத்துப்பட்டியை முதுகுப் பக்கம் இழுத்துவிட்டார்.பேச்சைச் சற்று
ஒரு நொடி நிறுத்தி உப்பின கன்னத்து முகத்தைத் தணித்து நெஞ்சில் காற்றை ஆழமாய் ஊதினார். மீண்டும் பேச்சைத் துவங்கும் போதும் சிரிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
இது ஒரு சாதாரணக் காட்சிதான். இது ஒரு சாதாரணக் காட்சி இல்லை என்று தானே இவ்வளவு காலம் அதை மனம் ஞாபகம் வைத்திருக்கிறது.
__________________________________________________________________-
தாம்புரவர்ணி ஆத்துலே
முங்கி முங்கிக் குளித்து
கள்ளக்குளியில கூட
வெரால் பாஞ்சு பாஞ்சு
பொறுக்குன கூழாங்கல்லுகள
எங்க வீட்டு
நூறுவயசு கல்லுத்தூணு
சுண்ணாம்புச்சாந்து சாட்சியாய்
தாசால்ல பரத்தி வச்சுருக்கேன்
ஒரு ஓரத்துல.
அதப்பத்தி யாருக்கும் கவனமில்ல.
அங்க தான் கெடக்கு.
வயசுகளுக்கு
கூன் விழுந்து நரை பழுத்துப்போச்சு.
எதிரே
உள்ள எங்க வீட்டு ராட்சச புளியமரம் மட்டும்
எங்கோ வான உச்சிக்குப்போயி
புளியம்பூவையும்
தளிர்பிஞ்சுவையும்
போட்டு நக்கி நக்கி
அந்த ஊதா வானங்கூட
புளிச்சுக்கெடக்கு.
அது என்ன?
உரக்கெடங்கு கணக்கா
நாத்தம்புடிச்சுக் கெடக்குற
நெனவுக்குள்ள பூரா
மாணிக்கச்சோழிக குலுங்கிட்டு கெடக்கு.
போரும் போரும்..
மொகரக்கட்டைய பாரு.
இதுக்கெல்லாமா
ஒனக்கு அக்காடமி அவார்டு கேக்குது!
__________________________________
சொற்கீரன்.
அப்படித்தான்.
அடையாளப்படுத்துனாங்க
அனுமார் சாமியை
எங்களுக்கு.
அத கும்புட்டோம்னா..
நமக்கு எதிரியே இருக்கமாட்டாங்களாம்.
ஆனா
துடியான சாமியாம்.
கொஞ்சம் பிசகிட்டோம்னாலும்
ரத்தம் கக்கித் தான் சாவணுமாம்.
இப்ப என்ன பண்ணுறதுங்க?
அதுக்கும் சேத்தே கும்புட்டுருங்க!
_____________________________________
சொற்கீரன்
கோடி கோடி ஆண்டுகளாய்
இதே முறுக்கல் தான்.
இதே பிழியல் தான்.
தோன்றியதை எல்லாம்
சொல்கின்றேன்.
இரைச்சல் கொட்டுகளுடன்
தினம் தினமும்.
பூரான்கள் நெளிந்து ஓடுகின்றன.
அதுவும் கோடி கோடிகளாய்.
பிரகடனங்கள் ஏதுமின்றி
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக