திலி ஜங்க்ஷன்
_________________________________
அந்த சந்திப்பிள்ளையார்
கோவிலைத்தொட்டு
பிள்ளையார் சுழி போட்டு
நடை பயின்று சென்ற
அந்த அம்பதுகளில்
சங்கிலி பூதத்தான் கூட
கோவில் முனை கூட்டிய இடத்து
கோணத்து ஜியாமெட்ரியை
பாடம் எடுத்துக்கொண்டே இருப்பான்.
அப்புறம்
நடை நீளும்.
ஆர்ச் வழியே ரத்னாடாக்கீஸ்
போஸ்டரில்
சங்கிலியோடு வீர வசனம் பேசும்
சிவாஜி கணேசனின்
மீசை துடிக்கும் துடிப்பு
புல்லரிக்க வைக்கும்.
நெல்லையின்
எப்படி உறைத்தாலும் மாத்து குறையாத
அந்த ஜங்க்ஷன் நெரிசல்
திலி ஜங்க்ஷன் மண்ணின் வேர்வையை
மணக்க மணக்க
"சந்திரா விலாஸ்" காப்பியோடு
ருசிக்கத் தரும்.
நடை
சுலோசனா முதலியார் பாலத்தில்
கால் பாவும்போது
(தயவு செய்து சாதிக்குறிப்பின்
கொச்சைத்தனத்தை
மன்னித்து விட வேண்டுகிறேன்.)
சிந்துபூந்துறை ஆற்றங்கரையில்
சிவப்பு வெள்ளைப்பட்டைகளோடு
உள்ளே சிலிர்த்துக்கொண்டிருக்கும்
"பேராய்ச்சி"யின்
கொப்பளிக்கும் பார்வையும்
உருட்டி விழிக்கும்.
இறுதியாய் அந்த ஊசிக்கோபுரத்து
சிலுவை நுனிகள்
கொடி அசைக்கும்...
போதும் உன் நடை என்று.
எத்தனை தடவைகள் இந்த
நினைவுகளை
பருகிக்கொண்டே இருப்பது?
வாழ்க்கை நூலின்
முதலும் முடிவும்
முடிச்சு போட்டு கொள்ள முடியாத
புதிர்க்குகையின்
அடுத்த பக்கம் வெளிச்சத்துக்கு
எப்போதுமே
இருட்டு என்று தானே பெயர்?
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக