திங்கள், 23 பிப்ரவரி, 2026

"பிக்காஸோ"க்குழப்பங்கள்!

 

தனிப்பட்டவன் டைரின்னு

அவன் ஒன்றில் எழுத உட்கார்ந்தான்.

மேலே மாமரத்து நிழல்.

எங்கோ இருந்து காக்கைகளின்

ஒலிக்கீறல்கள்.

இருந்து விட்டுப் போகட்டும்

ஊமை சாட்சிகள் தானே.

நிறைய எழுதினான் 

வரிந்து வரிந்து எழுதினான்.

உணர்ச்சிப்பிழியல்களை

கல்யாண வீட்டில் தவசுப்பிள்ளை

ஆவி பறக்கும் சோற்றை

கோணிச்சாக்கில் வடிகட்டுவது போல்

பிழிந்து தீர்த்தான்.

அப்புறமாய் படிக்கலாம்

என்று

டப்பென்று மூடிக்கொண்டு வந்து விட்டான்.

ஆற அமர அதை படிக்கலாம்

என்று..

என்ன இது?

நெய்வண்ண ஓவியம் போல்

ஒரு பிரபஞ்சக்குழம்பு?

அவன் வரிகளுக்கு மேல்

அப்போது தான் விழுந்த‌

காக்காய் எச்சம்.

டப்பென்று மூடியதில்

அர்த்தம் இனிமேல் தான் 

புரிந்து கொண்டு பார்க்கவேண்டும்

என்று

காக்கை வரைந்து கொடுத்த‌

அவனது "பிக்காஸோ"க்குழப்பங்கள்!

_________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக