ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

விடியல்

 

பொழுது விடிந்தாயிற்று.
வானமும் வடிந்து கோழை வடித்தது.
சன்னல் கம்பியிடுக்குகளில்
சூரிய ஆரஞ்சுப்பழம்
சுளையைப் பிழிந்து வாய்க்குள்
தந்தது.
படுக்கைகளை சுருட்டிப் போட்டாகி விட்டது.
அப்புறம்..
அப்புறம்..
அந்த வட்டகை டம்ளர் காப்பி நுரைக்குள்
கவிதையை ஊதி ஊதி
உறிஞ்சிக் குடித்து எழுதவேண்டும்.
எங்கோ
மைசூர் மலைச்சரிவுகளில்
முதுகில் குடும்பத்தையும்
காப்பிப்பழக்கொத்துக்கூடையையும்
சுமக்கும் வலி வருடிய பெண்களின்
அன்றாட ஆவித்துடிப்புகள்
நசுங்கி கூழாகுவதே
அம்மண்ணின் துயரங்கள்
இழையாடும் இலக்கியம்.
என் மாமூல் நகர்வுகளில்
கற்பனையின் நரம்பு ஓட்டங்களில்
சூடு கிளம்பிய‌
பொறிவாணங்களை
பொட்டலம் கட்டினேன்
சொற்பொதிகளாய்.
என் குறுக்கு நெடுக்குக்கோடுகளில்
கோலம் போடத்தொடங்கிய‌
விடியல் விளம்பரம்
தமுக்கு அடிக்கத்தொடங்கிவிட்டது.
பேனாவின் காக்காய்வலிப்புகளில்
மயிற்பீலிகள்
குமிழிகள் விட்டுக்கொண்டிருந்தன.
________________________________________________
சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக