வியாழன், 5 பிப்ரவரி, 2026

வண்ணதாசன் அவர்களே! /06.02.2026

 


1.

வண்ணதாசன் அவர்களே!

பாலம் தாண்டுபவர்களின்

பட்டியல்காரர்கள்

அத்தனை பேரும்

வாழ்க்கையின்

பரமபதக் கட்டங்களில்

கட்டம் கட்டப்பட்டவர்கள் தான்.

பரமபத வாசலை

முதுகுச்சுமையாக வைத்துக்கொண்டே

"முண்டகோபநிஷதம்"

படித்துக்கொண்டிருப்பவர்கள் தான்.

அந்தப் பாலத்து நடுவில்

அந்த கூட்ட நெரிசலில்

கடவுளர்களும் தான்

வாசலைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களைத்தேடும் கடவுளுக்கும்

கடவுளைத்தேடும் மனிதர்களுக்கும் 

தானே

அந்தப்பாலம்?

__சொற்கீரன்__


2

ஹோல்டான்! ஹோல்டான்!


ஒரு ரோடு தான்.

எத்தனை பஸ்கள்?

எத்தனை பயணிகள்?

கருப்பைகளின் மழை.

கருக்களின்

உருக்கள் எத்தனை எத்தனை?

அத்வைதம் அத்வைதம்

என்று தான்

ஹோல்டான்கள் சொல்கின்றோம்.

பாவம்.

கோழிக்குஞ்சு

நசுங்கிக் கூழாகிக்

கிடக்கிறது

_________________________________________

சொற்கீரன்


3


வண்ணதாசன் அவர்களே.

அந்த பச்சைத்தாமரை படுத்திய பாடு!

ஒரு கவிதையை எப்படி

காய்ச்சி வடிப்பது?

கவிதையை குடிப்பதோ படிப்பதோ

அது பல மில்லியன்

மின்னல் நரம்புகளை

கோர்த்துக்கொள்வது அல்லவா?

மனப்பிழம்பு

பிழிந்து பிழிந்து வழியும் போது

ஆகாசம் பில்லியன் பில்லியன் என்று

கூறு போடப்படுகிறது.

இப்படி ஒரு பனஞ்சில்லாட்டில்

வடிகட்டப்படுவது

சிந்தனை நியூரான்களின் பிசிறுகளே.

நான் எத்தனை எத்தனை

ஒமர்கய்யாம்களாய்

பிய்ந்து கிடக்கிறேன் என்பதை

அந்த சொற்களின் ஓடைகளே சொல்லும்.

___சொற்கீரன்___


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக