செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

VANNADAHASAN KAVITHAI./10.02.26



VANNADAHASAN KAVITHAI.
இன்று பனங்கிழங்கு விற்பனை
பஸ் சார்ஜுக்குக் கூடத் தேறாது.
எல்லோரும் கமலாரஞ்சுகளை வாங்கிப் போகிறார்கள்.
கமலாரஞ்சுப் பழங்களை அவள் வெறுத்தாள்.
சிறு பந்து போல் இருக்கும் அவற்றை யார் மீதோ எறிய நினைத்தாள்.
ஆனால் கமலாரஞ்சுச் சுளைகளின் புளித்த இனிப்பு அவளுக்குப் பிடித்தே இருந்தது.
ஒரு கமலாரஞ்சுத் தோப்பை அவள் பார்க்க விரும்பினாள்.
கமலாரஞ்சுப் பூக்கள் எப்படி இருக்கும் புளியம் பூக்கள் போலவா?
உதிர்ந்து கிடக்கும் கமலாரஞ்சுப் பழங்களை பாவாடை கொள்ளாமல் பொறுக்க விடுவார்களா அவளை?
அவள் நினைத்துக் கொண்டாள் , பொறுக்கிய கமலாரஞ்சு ஒன்றை
சேர்மக் கனி தாத்தாவுக்கு உரித்துக் கொடுப்பதாக.
உரிக்க உரிக்க, மஞ்சளும் பூண்டும் உப்பும் போட்டு
மண்சட்டியில் அவித்த பனங்கிழங்கு
வாடையே

கமலாரஞ்சுக்குள்ளிருந்து வருவதாக. 


___________________________________________________________-


வண்ணதாசனும் கமலாராஞ்சுகளும்
_________________________________________
பனையும் பனசார்ந்த
பனங்கிழங்கும் தானே
நம் செம்மொழித்தமிழ்.
ஒவ்வொரு பொங்கலிலும்
அவித்த பனங்கிழங்கை
உரித்து தின்று சவைப்பது தானே
நம் "பொங்கலோ பொங்கல்" ஓலக்கம்!
பனையோலைகளில்
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
சுவைக்கிறுக்கல்களாய்
எத்தனை எத்தனை
புலவர்களின் எழுத்தாணிகளுக்குள்
மணி மண்டபம் கட்டி நிற்கின்றன.
கமலாராஞ்சுகளை கட்டியாள வரிந்து வரும்
பாவாடை நாடாக்களின்
பழம் நினைப்பின் பல்சுவைப்பகுதியிலும்
புளிப்பே தட்டாத பாடப்பகுதிகள் தான்.
சங்கச்செய்யுள் சந்திமுனைகளில்
பரிசில் மகிழ்ச்சிகள் நொதித்து நுரைக்க‌
மண்டை நிறைய பெய்து தருவதை
மண்டை தளும்பும் கற்பனை வெள்ளமாக்கி
வரி வரி பிளந்து பாயும் காட்டாற்றையே
குடித்துக் குமிழி பூத்த தமிழ்
பஃறுளியாறாய் கல்லாறாய்
சல சலப்பதே நமக்குக் கேட்கிறது.
_____________________________________________‍‍
சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக