எந்த வருடத்து கிட்ஸ் ஆகவும்
இருந்து விட்டுப்போங்கள்.
உங்களுக்கு
உதடுகளின் மேல்
பூமயிர்கள் தலை காட்டியபோது
குருத்தெலும்புக்குள்
கும்மிடிப்பூண்டி வரை
குரங்குப்பெடல்க்கொண்டு போனால்
அவள் சிரிப்பாளா?
என்று குறு குறுத்திருக்கிறதா?
அம்மா மண்டபத்து உச்சியிலிருந்து
விரால் பாய்ந்தால்
அவள் வியப்பு காட்டுவாளா
என்று
எண்ணத்தோன்றியிருக்கிறதா?
சரி
போகட்டும்.
மூன்றாம் பிறை கமலஹாசன் மாதிரி
நசுங்கிய அலுமினியப்பாத்திரத்தை
கவிழ்த்துக்க்ண்டு
ஆடுரா ராமா...ஆடுரா ராமா
என்று
ஆட்டம் காட்டினால்
குமுக்கென்று
குமிழ்ச்சிரிப்பு செய்வாள்
என்று
தோன்றுகிறதா?
உங்கள் அருணாக்கயிறே
மின்சார இன்பம் பாய்ச்சி பாய்ச்சி
உங்களை கிறங்கடிக்கும்
மின்னல் கயிறு ஆகியிருக்கிறதா?
அவ்வளவு தான்.
இந்த "கிட்ஸ்"தனத்துக்கு
வருடங்கள் எனும்
எண்ணிக்கை தேவையே இல்லை.
இதற்கு
பழைய புதிய ஏற்பாடுகளுடன்
கட்டு கட்டாக
கிள்ளிவிடும்
நாவல்கள் உங்களை
அந்த சிரிப்புகளின்
சிலுவைகளை சுமக்க வைக்க
காத்திருக்கின்றன.
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக