இனிய காலைப்பொழுது.
கதிரவனின் ஒளித்தூரிகையின்
கோடுகள்
நம்மைக் கிச்சு கிச்சு மூட்டத்
தொடங்கி விட்டன.
மகிழ்ச்சியின் நெருப்பு சுடர் பூக்கிறது.
அது அப்போது
நம் வயதுகளைப்போய்
சுரண்டி சொரிந்து கொண்டிருப்பதில்லை.
அறுபது.. ..எண்பது என்று
உன் தலையில்
சோழிகள் குலுக்கிப்போட்டு
சோதிடம் சொல்ல வரவில்லை.
உன் சிந்தனையின் ஒவ்வொரு
துளியிலும்
ஏழ் கடலை புகட்ட வந்திருக்கிறது.
அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது
என்று
மனிதம் எனும் வெளிச்சத்தைக்
கொண்டாடுகிறது.
உன் முதுகுக்குப்பின்னே
கிடக்கும் நூற்றாண்டுகளின்
எலும்புக்குவியல்களைக்கொண்டு
எழுதிக்கொண்டிருந்தது போதும்.
அதை ஓசை கிளப்பிக்கொண்டு
கல்லறைகளுக்குள்
கடவுள்களை
தேடிக்கொண்டிருந்தது போதும்.
நீயே தான் கடவுள் என்றும் தான்
ஸ்லோகம் சொல்லியிருக்கிறானே.
அப்புறமும்
உன்னைக் குப்புறத்தள்ளி
கை கால் விலங்கிட்டு
வர்ணம் தீட்டி
ஏன் இந்த வஞ்சக ஆட்டங்கள்?
எல்லாவற்றையும் இடித்து நொறுக்கு.
நீ நிற்கும் இடமே
உன் ஆலயம்.
நீ சொல்லும் அறிவே
உன் மந்திரம்.
திமிறு.
முரண்படு.
மூண்டு எழு.
இந்த சோளத்தட்டை அவதாரங்கள்
அவதாரங்கள் எல்லாம்
தூள்..தூள்..
அதோ
கதிரவன் கை அசைக்கின்றான்.
உனக்கு என்றுமே
இனிய பொழுது தான்.
உன் இதயமே உன்
அகன்ற வானம் தான்.
பற..பற..
சிந்தனைச்சிறகுகள்
புயல் வீசட்டும்.
______________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக