ஆடுகளம்
________________________________________
சொற்கீரன்.
நான் கூப்பிட்டுக்கொண்டே
இருக்க வேண்டுமா?
நான் கும்பிட்டுக்கொண்டே
இருக்க வேண்டுமா?
இதற்காக
ஒரு அம்மாவின் வயிற்று
இருட்டறையிலிருந்து
வந்து குதிக்க வேண்டுமா?
அங்கிருந்தே
உன்னைக்கும்பிட்டு விட்டு
அப்படியே
நீ சொல்லும் சொர்க்கத்திற்கு
வந்தால் என்ன?
"புரியாமல் பேசுகிறாயே!
நீ இங்கே வந்து குதித்து
உன் மூளையின் விசுவரூபம்
தரிசனம் செய்து
அதில்
என்னால் எவ்வளவு என்னால்
புரிந்து கோள்ள முடியுமோ
அது வரைக்கும்
உன்னைப்போன்றவர்கள்
வந்து
கோடி கோடியாய் வந்து
கீழே இறங்க வேண்டும்.
"அப்படி
நாங்கள் கீழே இறங்குவதைத்தான்
நீ அவதாரம் என்கிறாயா?
எங்களிடம் நீ
அறிந்ததைத்தான்
புரியாத கூச்சல்களாக்கி
இரைச்சல் எழுப்பிக்கொண்டிருக்கிறாயா?"
போச்சு ...போச்சு
தேவரகசியம் உனக்கு
தெரிஞ்சு போச்சே!
அடுத்த கணம்
அவன்
மேஷகணன்ங்களுள்
ஒன்றாகி விட்டான்.
அப்போதும் அவன்
மே மே மே....
என்று கேள்வி கேட்டான்.
"என்னை ஆடாக்கி விட்டால் விடுவேனா?
மே மே மே...
ஆடுகளத்தின் குரல் மொழியிலும்
கூர்மையான கேள்விகள்
அவனை துளைக்க ஆரம்பித்தது.
சரி..
இரு வருகிறேன்...
இப்போது
இறைவனும் ஒரு ஆடாகி
அந்த ஆட்டுடன்
மே மே மேக்களில்
உரையாட ஆரம்பித்து விட்டது.
அது கேட்டதின் சாராம்சம் இது தான்.
மனிதப்பதர்களே
உங்கள் விஞ்ஞானத்தைக்கொண்டு
என் மூக்கு நுனி வரைக்கும்
சொறிவதற்கு வந்து விட்டீர்களே
என்ன அகம்பாவம்.
பேசாமல் ப்ஜனை செய்து கொண்டு
இருப்பதாய் தானே உங்களை
நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
மே மே ...பதில் சொன்னது.
அதற்கு என்ன?
முக்காலே மூணு வீசும்
சப்பளாக்கட்டைகளைத்
தட்டிக்கொண்டு தானே
கிடக்கின்றன.
நேற்று எம் எஸ் என் செய்திக்கிடங்கில்
ஒரு செய்தி பார்த்து வெல வெலத்துப்போனேன்.
பகவான் ஆடு பதற்றத்தோடு
மே மே மேக்களை அலறிக்கொண்டே
இருந்தது.
இந்த ஆடு மீண்டும் பேசியது.
"ஓ அதைச்சொல்கிறாயா?
நாங்கள்
இப்போ புதிதாய் "வில்லோ" என்ற பெயரில்
ஒரு குவாண்டம் சிப் இறக்கியிருக்கிறோம்.
அதன் வேகம் என்ன தெரியுமோ?"
"அதத்தானே நான் சொல்ல வந்தேன்..."
பகவான் ஆடு
பொறிவாயில் ஐந்தையும் அவித்துக்கொண்டு
நடு நடுங்கி நின்றது.
இந்த ஆடு தொடர்ந்தது.
ஆமாம்.
10 ன் மேல் 25 பூஜ்யங்களைப்போட்டுக்கொள்.
இவ்வளவு காலம் ஆண்டுகள் ஆகுமாம்
இப்போதுள்ள சூப்பர் கம்பியூட்டர்களுக்கு
ஒரு சிக்கலுக்கு தீர்வு சொல்ல.
இதை ஐந்து நிமிடத்துக்குள்
தீர்த்துவிடுமாம் இந்த விஞ்ஞான மனிதனின்
"வில்லோ"
என்ன வில்லோ போ?
அறிவின் உங்கள் அம்புப்பிரளயத்தால்
எங்கள் விண்ணுலகத்தையே
நீங்கள் பொடி பொடியாக்கினால்
எங்கள்
சொர்க்க லோகங்களின்
டாய் ஸ்டோரிகள் விற்பனையாகாமல்
குப்பைக்கு அல்லவா போய்விடும்?
அது தான்
உங்கள் மூளையை நீங்கள்
நுட்பமாக்கும் உங்கள் வித்தையை
அறிந்து கொள்ளத்தான்
இந்த "கோடி கோடி கோடி...மக்கள்" அவதாரம்.
நீயும் உன் பங்குக்கு
இந்த பிரபஞ்சங்களை
உன் விரல் நுனியில் ஆட்டி வை
அது வரை...
அந்த தொட்டிலில் போய் விழு.
குவா குவா என்று
குரல் கொடு.
இன்னும் ஒரு புதிய
"குவா"(அ)ண்டம் பிறந்து வரட்டும்."
ஒரு வழியாய்
பகவான் ஆடு
மே மே என்று சொல்லிக்கொண்டே
மேல் உலகம் சென்றது.
ஆம்.
அங்கே கறி விருந்து கன ஜோர்!
_____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக