டிசம்பர் பூக்கள்
__________________________________
சொற்கீரன்
வருடம் சருகாக விழும்போது
பூக்கும் விடியல் இது.
அந்த சிலுவை மரத்தில்
மனிதன்
முதல் முதலாக
நான் சருகு ஆக வரவில்லை
என்று
ரத்தம் பூத்துக் காட்டியவன்.
மதம் என்னும்
பெரிய ஆலமரத்து நிழலில்
எத்தனை நிகழ்வுகள்?
வேண்டுதல் வேண்டாமை இன்றி
எல்லோர் தலையிலும்
கிமு கிபி
என்றொரு
காலக்கிரீடம் சூட்டிவிட்டுப்போன
அந்த மாமனிதன் வசனங்கள்
வரலாறு ஆயின.
நம்பிக்கை குமிழிகள் கூட
அவன் முன் நிற்கும் போது
கல்வெட்டுகள் ஆகி விடுகின்றன.
தேவப்பிதாக்களும்
தேவ குமாரர்களும்
வானத்தில் ஆசனமிட்டு
இருக்கின்றனர்.
ஆனாலும் அவர்கள்
மண்ணின் பிதாக்களும் குமாரர்களுமாய்
வியர்வை வேர்களின்
ஊற்றில் சுரந்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த உலகம் முழுமைக்கும்
பதியம் இட்ட
மானிட நேயத்தின்
முதல் பூ
எப்போது பூக்கும்?
முளைவிடும்
கேள்விக்கு முந்திய பதில்களுமாய்
பதில்களுக்கு பிந்திய கேள்விகளுமாய்
படபடக்கின்றன
அந்த புறாவின் சிறகுகளில்.
நமக்கு இன்னும்
வானம் முழுதும்
சிலேட்டும் புத்தகமும் தான்.
சிந்தனைகளுக்கு
முட்கிரீடம் சூட்டவரும்
மதங்களை
முதலில் மண்ணில் புதைப்போம்.
__________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக