சனி, 7 டிசம்பர், 2024

பக்தியின் விஞ்ஞானம்.




பக்தியின் விஞ்ஞானம்.

_______________________________________



என்ன உலகமடா இது

என்று சலித்துக்கொண்டான்

மோவாயைச் சொறிந்து கொண்டு!

அதோடு நிற்காமல்

அதை கவிதையாக எழுதினான்.

அதில்

உலகைப்படைத்த பிரமனை

ஏசினான்.

அப்புறம்

கடவுள் ஒழுங்காய்த்தான் படைத்தார்

எல்லாம் இந்த மனுசப்பயல்கள் தான்

என்று

திசை திருப்பிக்கொண்டான்.

அவர் ஒழுங்காய்ப்படைத்தார் என்றால்

மனுசப்பயல்கள் ஒழுங்காகத்தானே

பிறந்திருக்கவேண்டும்....

இப்போ

ஏதோ ஒரு முக்கிய பாயின்டை பிடித்தவனாய்

யுரேக்கா யுரேக்கா என்று

கூவாத குறையாய்

தெருவெல்லாம் ஓடினான்

தட தட வென்று

எதிரே எதிர்ப்படுவோரையெல்லாம்

முட்டி மோதிக்கொண்டு

ஓடினான்.

ஒரு "சாமி" ஊர்வலம்

யானை ஒட்டகம் 

தீவட்டிகள் 

மற்றும் கொட்டுகள் எக்காளங்களோடு

வந்து கொண்டிருந்தது..

அதைக்கண்டு

எந்திரம் போல் நின்று விட்டான்.

எந்திரம் போல்

கைகள் இரண்டையும் தலைக்கு மேல்

கூப்பிக்கொண்டு

தொழுதான்.

கை எடுத்து கும்பிட்டான்.

கண்ணீர் விட்டு

மனம் உருகினான்.

அது பக்தியில் ஒழுகிய கண்ணீரா?

இல்லை 

நம் அறியாமையைக்கண்ட‌

கடுங்கோபத்தில் சீறி எழுந்த

உணர்ச்சியில் உருகிய கண்ணீரா?

என்ன உலகமடா இது...

அவன் மீண்டும் ஆரம்பித்து விட்டான்.

யாராவது அவனுக்கு

அந்த புலம்பலுக்கு

துணை நில்லுங்களேன்!

என்ன உலகமடா?

இப்போது அந்த உலகம் 

அவனுக்கு துணைக்கு வந்தது.

"என்ன மனுஷங்களடா இவர்கள்?"

என்று

அதன் பங்குக்கும்

அது அங்கே புலம்பிக்கொண்டிருக்கிறது.

மோவாயைச் சொறிந்து கொண்டு!

அறிவின் உச்சியில் ஏறி நிற்கும்

ஏ ஐ ரோபோக்கள் கூட‌

இங்கே பக்தியில் உருகி

கண்ணீர் விட்டாக வேண்டும்.

ஒவ்வொரு துளியும்

பில்லியன் டாலர்கள்.

மார்க்கெட் விஞ்ஞானத்தின்

டேட்டா விஞ்ஞானம் 

அப்படித்தான் சொல்லுகிறது.


______________________________________________________

சொற்கீரன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக