செவ்வாய், 3 டிசம்பர், 2024

முட்கள்

 முட்கள்

_______________________________________


மூவர்ண ரோஜா என்றார்கள்

நான்கு வர்ண முள்ளை 

அடியில் வைத்துக்கொண்டு.

இந்த தேசத்து அடிமைச்சங்கிலியின்

நீளம் 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலே.

வேதம் என்றார்கள்.

வர்ணம் என்றார்கள்.

மனிதர்கள் மிருகங்களாய்

தலைகீழ் பரிணாமம் நோக்கி

வீழ்ந்தார்கள்.

மந்திரக்கோல் சிலர் கையில்.

மற்றையோர் வால் முளைக்காத‌

குரங்குகளாய்

"ஆடுரா ராமா..ஓடுரா ராமா"தான்.

இன்றும் அந்த ராமாதான்

துருப்புச்சீட்டு.

ஓட்டு போட்டு

விளையாடுவோம் வாருங்கள்

என்று

கணினியை கிளிக்கிக்கொண்டு

வந்தார்கள்.

அந்த ஒரு வழிப்பாதைப்பொட்டிக்குள்

கடைசிப்புள்ளி

கும்மிருட்டுகள்.

குருட்டுக் கல்விகள்.

உபனிடங்களின் உச்சிமுனை என்றார்கள்.

ஐயோ..ஐயோ

"வாராய் நீ வாராய்" என்று அல்லவா

கேட்கிறது...

குண்டலகேசிகளே

இந்த கமண்டலங்களை

உருட்டித்தள்ளுங்கள்!

ஜனநாயகத்தின் விடியல்

இதோ இதோ..

என்று ஒரு

பிரளயப்பேரிரைச்சல்

அதோ அதோ...

அங்கு கேட்டுக்கொண்டு தான் 

இருக்கிறது!


_______________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக