காலத்தின்
காதைப்பிடித்து திருகி
சுரம் பாட
அழைக்க முடியுமா?
காலம் இன்னும்
கடிகாரத்தை தான் அடையாளமாய்
காட்டுகிறது.
நம் இதயத்துடிப்புகள் தான்
அந்த "டிக் ..டிக்"
என்பதை அறியும் போது
பயம் ஒரு வேதாளமாய்
தோளில் தொற்றிக்கொள்கிறது.
காலமும் வெளியும்
ஒன்றுக்கொன்று
முதுகு காட்டி முகம் காட்டிக்கொள்கிறது
என்ற கணித சமன்பாடு
எழுதியவன்
கடவுளைக்கூட
போதும் போதும்
உன் சொக்கட்டான் விளையாட்டை
நிறுத்து என்கிறான்.
காலத்தை
எதனோடு ஒப்பிடுவது என்று
குழம்பி
அதையும் ஒரு
என்டாங்கில் மென்ட்
என்று "ஸ்கிப்பிங்" கயிறு
ஆடும் சிறுமியாய்
அந்த குவாண்டம் நம்
கன்னத்தை கிள்ளிவிட்டுப்போகிறது.
காலம்
நமக்கு எப்போதுமே
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி தான்
ரசம் பூசப்படுவதற்குப்பதில்
நம் பகற்கனவுகள் பூசப்பட்டிருக்கின்றன.
கடவுளை
காலமே என்று கூப்பிட்டுப்பார்.
அலறிப்புடைத்துக்கொண்டு
நம் முன்வந்து
உன்னோடு கண்ணாமூச்சி ஆட
நான் தானா கிடைத்தேன் என்று
சொல்லிவிட்டு ஓடியே போய்விடுவான்.
காலம் இப்படி
தொடங்கியிருக்கலாம் என்று
பிக் பாங்கை பொட்டு வைத்தார்கள்.
பின்னாடியே வந்த வெப் தொலைநோக்கி
உங்கள் தீபாவளி வெடியெல்லாம்
வெறும் புஸ்வாணம் என்று
சொல்லிவிட்டது.
அது தான் முதல் என்று பார்த்தால்
அது வால் போல் தெரிகிறது.
வாலைப்பிடித்துக்கொண்டே போனால்
வழுக்கிக்கொண்டே போகிறது.
எல்லாவற்றிற்கும்
மனிதனின் செயற்கை மூளையே
தீர்வு சொல்வதாய்
இயற்கையின் எல்லை
விளிம்பு அற்றதாய் இருக்கிறது.
இந்த காலம் தான் என்ன?
பேசாமல் இரவில் மொட்டைமாடியில்
ஈசிச்சேர் போட்டு படுத்துக்கொண்டு
எண்ணிக்கொண்டிருங்கள்.
விடியும் வரை
ஒரு நீள இரவின் அந்தக் கோடி வரை...
_______________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக