கவிதையாக தலைநீட்ட
மறுத்த சொற்களா?
பேனாவின் மூலத்தில்
மசியின் ஊற்றில்
சிந்தனையின் வீச்சில்
ஏதோ நோய் இருக்கலாம்.
பேய் அங்கு
தலைவிரித்து
கற்பனை என்று
பயம் காட்டி இருக்கலாம்.
பெட்டிக்குள்
விழுந்த இருட்டுகள் எல்லாம்
ஈயம் முலாம் பூசி
வெற்றித்தேர்தல் என்று
வெட்டி முழக்கம் செய்ய
அங்கு எழுத்துக்கூட்டமாய்
மொய்த்திருக்கலாம்.
வரலாறு திரிபு செய்து
கோழித்தலை திருகியது போல்
அந்த எழுத்துகளின்
மொழியெல்லாம்
ரத்தங்களின் ஆற்றுப்படைகளை
மட்டுமே
ஒப்பாரி வைத்திருக்கலாம்.
தமிழன் தன்
காலடி நிழல்களாலேயே
வாரி விடப்படும்
துன்பியல் நிகழ்வுகளில்
துவண்டு போனதால்
எழுத்துகளின் மிச்ச எலும்புகள்
மட்டுமே
ஃபாசில்களாய்
புதைந்து போய் இருக்கலாம்.
இமயத்தில் கொடியேற்றிய
பெருமிதம் எல்லாம்
ஆக்கிரமித்த கழுகுகளால்
களவாடப்பட்டு அந்தக் காயங்களில்
நம் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
உருக்குலைந்து போயிருக்கலாம்.
சங்கத்தமிழ்ச்செய்யுட்கள்
ஆராய்ச்சியே துவக்காத
புத்தம் புதுக்கட்டிட
மார்ச்சுவரிகளில்
அவை மல்லாந்தே கிடந்திருக்கலாம்!
என்ன கொடுமை இது?
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
இனி ஒரு எழுத்து செய்வோம்.
அதில்
கரையான் அரிக்காத
எரிமலைக்குழம்பெடுத்து
இலக்கியங்கள் செய்து குவிப்போம்!
__________________________________________
சொற்கீரன்.
(3-12-2024 காலை7.12 ல்
கலவைக் கலவரம் என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதை
பற்றிய கவிதை இது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக