____________________________________________
இதுவும் பிள்ளைத்தமிழே
என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன் எழுதிய
கவிதை பற்றிய கவிதை இது
______________________________________________
மனிதர்கள் எப்போதுமே
சிறு பிள்ளைகளாக இருந்தால்
பிள்ளைத்தமிழ்
உலகமே கொண்டாடும்
இலக்கியம் தான்.
பூக்களுக்கு
முதிர் பருவம் இல்லை.
உதிர் பருவம் மட்டுமே உண்டு.
மனிதக்குஞ்சு
பெரிசாய் மாறும்போது
பெரிய பெரிய முதலைகள் ஆகின்றன.
அதன் கோரைப்பற்கள்
கடவுள்கள்.
அதன் கண்ணீர்த்துளிகள்
ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டுகள்.
அதன் பார்வை குறி
எல்லாமே
கொல்லும் வெறியில்
நெய்யப்பட்ட லாபவெறியின்
வர்த்தக வெறி.
மனிதர்களை குவித்து வைத்து
கண்டந்துண்டமாக
வெட்டினால்
லாபம் கோடி கோடியாக
கொட்டுமென்றால்
எல்லா தேசிய பொருளாதாரமும்
கொலைவாளை
உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களாய்
பல்கிப்பெருகும்.
அப்போது மனிதன்
தன் தலையை வெட்ட
தானே ஒரு அரிவாளை
தயார் செய்து கொண்டிருப்பான்.
கடவுள் வசனங்களும்
கோவில் கட்டிடங்களும்
இதற்கு
பக்க மேளம் வாசிப்பதைத்தவிர
வேறு ஒன்றும் செய்வதில்லை.
கலை ஊடகங்களோ
பூடகமாக
ஒரு கொலைவாளின்
கலை நேர்த்தியான வேலைப்பாடுகளை
ஊதிப்பெருக்கி
பலூன்கள் விட்டு
வேடிக்கை காட்டும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது?
அதோ நடுங்கிக்கொண்டு கிடக்கும்
ஜனநாயகப்புலிகளைத் தான்
கேட்கவேண்டும்.
_________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக