புதன், 11 டிசம்பர், 2024

ஏன்?

 


ஏன்?

_____________________________



ஏன் எப்போதும்

மனம் புண்படுகிறது

என்று புலம்புகிறாய்?

மனம் இருக்கும் இடத்தில்

எப்போதும்

ஒரு எரிச்சலின்

வேள்வியை 

நடத்திக்கொண்டேயிருக்கிறாய்.

நாலு வர்ணத்தில் 

அந்த தீ

நாலாபுறமும் 

கொழுந்துவிட்டு 

எரிந்து கொண்டிருக்கிறது.

வெறுப்பை ஆகுதியாக்கியதில்

உடன் பிறப்புகளாய்

இருக்கும் மனிதர்கள்

உனக்கு அரக்கர்களாய்

ஆகிப்போனார்கள்.

ஒரு ஈ மொய்த்தால் கூட‌

ஒரு எறும்பு ஊர்ந்தால் கூட‌

அதை வத‌ம் செய்ய‌

பத்து கடவுள்களை

கூப்பிடுகிறாய்.

ஒரு தடவை 

உன் முன்னே ஒரு

விஸ்வரூபம்

பூதம் காட்டியது.

அதைக்கூட‌

உன் தொழுவத்தில் கட்டி

வைத்துக்கொண்டு

மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தாய்.

கடவுள்களாவது

புண்ணாக்காவது

என்று தான் அவை

அர்த்தங்களுக்குள் அர்த்தமாய்

ஒரு அர்த்தம் சொன்னது.

இப்போது புண் பட்டு நிற்பது

அந்த பிரம்மமே.

மனிதர்களை

அடிமைப்படுத்தி

நீ துன்புறுத்தும்ப்போதெல்லாம்

அந்த பிரம்மம்

புண்படுத்தப்பட்டு புண்படுத்தப்பட்டு

செத்தே போய் விட்டது.

இன்னும்

மந்திரங்களை

கொப்புளித்து கொப்புளித்து

அந்த செத்த பாம்பை

ஏன் அடித்துக்கொண்டே இருக்கிறாய்?


_____________________________________________________

சொற்கீரன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக