ஞாயிறு, 8 டிசம்பர், 2024

புஷ்பா 2


புஷ்பா  2

_____________________________


அது ஒரு காட்டுத்தீ 

என்கிறார்கள்.

மனிதனின் ரத்த நாளங்களில்

இனி நெருப்பின்

அணுக்களே.

எதை எரிக்கப்போகிறது?

பாதி உலகில் வெளிச்சம்.

பாதி உலகில் இருட்டு.

இதில்

எது இங்கே எரியும்?

காதல் என்ற சிக்கி முக்கிக்கல்

எப்போதும்

தீப்பொறியை

கர்ப்பம் தரித்துக்கொண்டே 

இருப்பது போல‌

ஏதாவது எதிலாவது

ஒரு வெறி

நீதியை நிலை நாட்ட வந்த

அவதாரம் போல‌

எல்லா நெருப்பையும் உமிழ்கிறது.

அந்த அவதாரம்

எதோ ஒரு அநீதியின்

அரிதாரமாய்

படக்கென்று ஒளிந்து கொள்கிறது.

மனிதன் குதறி குதறி திங்க‌

ஒரு கொத்து பரோட்டா வேண்டும்

அவ்வளவு தான்.

சமுதாயத்தின் நீதிக்கு

சொக்கப்பனை கொளுத்துவது போல்

இங்கு 

தீயின் விழுதுகள்

அனக்கொண்டா பாம்புகளாய்

நாக்குகளை சுழற்றுகின்றன.

இந்த பணமழை 

புராணப்பழம்பிரளயமாய்

பூமியையேகூட‌

எங்காவது கொண்டுபோய் 

அமிழ்த்தி விடலாம்.

மனிதனின் மயிலிறகு வருடல்களிலிருந்து

எப்படி மனிதம்

சிதையில் கொண்டுபோய் கிடத்தப்படுகிறது?

அவன் மூளையில் 

நமைச்சலின்

டைனோசார் முட்டைகள்

முட்டிக்கொண்டு

வெளியேறத்துடிக்கின்றன.

இதை வக்கிரம் என்று

ஒரு சொல்லில் தள்ளிவிடுவதும்

அக்கிரமம் தான்.

குஞ்சுகள் பொரியட்டும்.

கவலையில்லை.

ஏதாவது ஒரு புதிய ராட்சச‌

இறக்கை உயரே எழுந்திடட்டும்.

வானம் உரசும்போது

இந்த விடியலுக்கும் உறைக்கும்.

போதும்

இது வரை மலடு தட்டிக்கிடந்தது என்று.

கிழக்கு 

விடியுமா?

வெடிக்குமா?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________________________

சொற்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக