என்னவென்று....?
_______________________________________
மக்களின் குரலேதான்
"மகேசனின்"குரலா?
தெரியவில்லை.
எல்லா மக்களின் வடிவமே
ராமன் என்றால்
சம்புகன் தலையை ஏன்
ராமன் வெட்டினான்?
தவம் செய்வது அறம் தானே?
அறத்துக்கு
ஏன் இந்த சிரச்சேதம்?
எதற்கும் இங்கு
கேள்வி தானே ஊற்று.
சிந்தனை செய்.
செய்த சிந்தனையை
மீண்டும் கேள்விகளால்
சிந்தனை செய்.
நடப்புகளை இந்த
சிந்தனைகளால் வடிகட்டு.
இதுவே தூய்மையாக்கப்பட்ட
"வாலறிவு".
மிருகங்களுக்கு வால் மட்டுமே உண்டு.
வாலறிவு இல்லை.
சிந்தனை உயரங்களை
எட்டாத அளவுக்கும் கடந்து போகும்
மனிதனே "வாலறிவன்".
இறை என்றால் கடந்து போதல் எனும் பெயர்ச்சொல்.
இற என்றால் கடந்து போதல் எனும் வினைச்சொல்.
மனிதன் இறைவன் ஆவது இப்படித்தான்.
தமிழன் சொல்கிறான்
தந்திரம் தான் சூழ்ச்சி என்று.
வடக்கன் சொல்கிறான்
தந்திரம் என்றால் ஆட்சி என்று.
இப்போது புரிகிறதா
சூழ்ச்சி தான் ஆட்சி என்று.
மெய் போல் பொய் இருக்கும்.
பொய் போல் மெய் இருக்கும்.
ஆங்கிலம் சொல்கிறது அதை.
வெர்ச்சுவல் ரியாலிடி என்று.
தமழில் அவை
கானல் நீர் ஆறுகள் தான்.
இங்கே அவலம் ஆறாய் பெருகுகிறது.
இந்த பொய் ஆறு பெருகியா
விளைச்சல் கை கூடும்?
இன்னதென்று தெரியாமல்
இன்னதென்று கூறுகின்றார்.
எதுகை மோனைகளில்
ஒரு ஆபாசம் செய்கின்றார்.
பாசிஸம் ஒரு பாயாசம் என்கின்றார்.
ஜனநாயகம்
நாயகமா?
மத நாயகம்
நாயகமா?
யாருடைய நாயகம் இது?
கை விலங்கும் கால் விலங்கும்
மக்கள் எனும் ராமருக்கே
எனில்
ராமன் இருப்பது கோவிலிலா?
சிறையினிலா?
எந்திரம் விழுங்கி விட்ட
லட்சம் லட்சம் ஓட்டுகளில்
எலும்பு மிச்சம் தேடுகிறோம்
என்னாச்சு?
என்னாச்சு?
எச்சம் இட்ட மிச்சத்தில்
ஜனநாயகம் என்னாச்சு?
இப்போது பொருள் சொல்வீர்
நம் ஜனநாயகம்
என்னவென்று?
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக