வியாழன், 27 டிசம்பர், 2018

பேசும் சித்திரம்

பேசும் சித்திரம்
================================================ருத்ரா.

தொழில் நுட்பம்
மனிதனை
மூளையின் புழு ஆக்கிவிட்டது.
அது நெளிவதற்குக் கூட‌
இந்த பிரபஞ்சங்கள் எல்லாம்
போதவில்லை.
காலம் கூட‌
இதன் தீனியாகியது.
இதன்
இப்போதைய "நேனோ செகண்டுக்குள்"
இதை நொறுக்கித்தள்ளி விட்டு
முளைவிடும்
அடுத்த நேனோ செகண்டின்
முகம் மட்டுமே
இங்கு பேசுகிறது.
ஒரு ஐந்து நிமிடம் முன்னே
குடித்த காபி கூட‌
பல நூற்றாண்டுகள் பழசாகி விடுகின்றன.
நினைவுகளை அசைபோடும்
பழைய பஞ்சாங்கப்பேர்வழிகள்
பரண்களில் தூக்கி வீசப்படுகின்றனர்.
நீ எழுதியது
எனக்குப்பிடித்தால்
"லைக்" தானே
விரல் வழியே கசிய விடுவது தானே
எழுத்தின் நிறம்!
ஆனால்
நம் விரல் வழியே
லைக்கை பிடுங்கிவிடும்
தொழில் நுட்பம் கூட வந்துவிட்டது.
நம்மை நமக்குத்தெரியாமல் கூட‌
நாமே நம்மை
அசிங்கமாக பார்க்கவைத்து
விளம்பரம் பண்ணி
காசு பார்க்கும் வியாபர அரக்கனுக்கு
கை கட்டி நிற்கும்
இந்த தொழில்நுட்பம்
ஒரு "அழகிய வளையல் பூச்சியா?"
இல்லை
நம் தலைமுறைகளையே
விழுங்கி ஏப்பம் விடும்
அனக்கொண்டா பாம்புகளா?
மானிட நண்பா!
அழிவின்
விளிம்பில் நின்று கொண்டு
அந்த கிராஃபிக்ஸையே
செல்ஃபி எடுத்து
செல்லரித்துப்போய் விடாதே!
தலையணை தலையணையாக‌
"சார்லஸ் டிக்கன் ஸ்"
நாவல்கள் எழுதிக்கொவித்திருக்கிறாரே
அந்த அழகிய படைப்புகளுக்குள்
உன் தாகம்
உன் தேடல்
உன் கனவு
எனும்
வாழ்க்கையின் வைர ஊசி
விழுந்து கிடக்கிறதே!
அதை தேடி விளையாடு.
அந்த முக்குளிப்பில்
கண்ணீர் முத்துக்களால்
நீ இடறப்படலாம்.
அப்போது உன் இதயம் உன்னை
உரசுவதை உணரலாம்.
நண்பனே! நண்பன்! நண்பனே!
நீ
இந்த சிலிகன் உடலுக்குள்
அவிந்து ஆவியாய் மறையும் முன்
உன் உயிர் பேசும் சித்திரத்தை
ஒரு முறை பார்த்துவிடு!

======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக