செவ்வாய், 4 டிசம்பர், 2018

பெண்ணே !


பெண்ணே !
=============================================ருத்ரா.


உனக்கு
ஒரு கவிதை எழுதினேன்.
உன் வளையலையும்
மல்லிகைப்பூவையும்
தாண்டி
எந்த எழுத்துக்களும் நகரவில்லை.
உன் குங்கமப்பொட்டில்
தொட்டு தொட்டு எழுதினேன்.
யாருக்கும் எளிதில்
மசியாத உன் மசியைத் தொட்டு
எழுதினேன்.
திடீரென்று
உன் மனம் தோட்டவன் என்று
ஒரு வானம் கிடைத்தது
உனக்கு.
தினம் தினம் உனக்குள்
மின்னல் வெட்டி
அந்த ஒளியிழைக்குள்
நீ ஒளிந்து கொண்டாய்.
உன் கண்சிமிட்டல்களில்
மில்லியன் பட்டாம்பூச்சிகளின்
பூங்காவனம் புகுந்து கொண்டது.
கையளவு உள்ளத்தில்
கடல் அளவு ஆசை.
ஆம்
அவை அலையடிப்பது
அந்த எண்களில் மட்டுமே.
அந்த எண்களே அவன் கண்கள்.
அந்த எண்களே உன் கண்கள்.
கண்கள் பொத்தி பொத்தி ...
அல்ல
கண்கள் ஒத்தி ஒத்தி ...
கண்ணாமூச்சி ஆட்டம் துவக்கி விட்டீர்கள்.
அதற்கு இடம் இல்லை. தடம் இல்லை.
வேலி இல்லை.கதவு இல்லை.
கடிகாரம் தன் முட்களையெல்லாம்
முறித்துப் போட்டு விட்டது.
காலத்தையும்
ஒரு காலன் வந்து
விழுங்கிவிட்டது போல்
நேரம் காலம் எல்லாம்
அங்கே மூளியாகி விட்டது!
பளப் பள வென ஃ போம் லெதர்
அட்டையை சட்டையாக
அணிந்திருக்கும்
இந்த ஜன்னலில்
ஆயிரம் பிரபஞ்சங்கள் பிதுங்கி
வழிந்தன.
பஞ்சு மிட்டாய் மேகங்கள்
முகத்தோடு வந்து
வருடிசென்றன இனிய கனவுகளாய் !
பெண்ணே !
உனக்கு கவிதை எழுத
இப்போது எதுவும் தேவையில்லை.
அந்த "செல்ஃ போன்" தான்
இனி எல்லாம்.
அந்த "உள்ளங்கை"கள் எல்லாம்
இனி உங்கள் "உள்ளங்களே".

ஒரு நாள்
விரல்களால்
அவன் கன்னம் வருடினாய்
ஆம்
அவன் எண்களை .....
அவனும் தான் ..
அந்த எண்கள் எனும்
உன்  கண்களுக்கு
அவன் செவியால்
முத்தமிட்டான்.
............................
............................
அவன் வந்த "மோட்டார் பைக்குடன்"
ஒரு கனரக வாகனமும்
கனமாய்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டது.

அவள் கைபேசியில்
அந்த "அசுர கணங்கள்"
ரத்த எச்சிலாய்
ஒளி உமிழ்ந்தது.
ரிங் டோனில்
"மரண மாஸ்.."
"காளியாட்டம்"ஆடிக்கொண்டிருக்கிறது.

=======================================================














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக