திங்கள், 3 டிசம்பர், 2018

அன்பான ரஜினி அவர்களே.


அன்பான ரஜினி அவர்களே.
=========================================ருத்ரா


மறுபடியும்
"வெற்றிடக்கூச்சலை"
துவங்கி விட்டீர்கள்.
"அவன்"
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
என்ற
உங்கள் ஆத்மீகம்
அரசியல் என்று வரும்போது
அந்த "வெற்றிடத்தைக்"குறி வைப்பதன்
உட்குரல் என்ன சொல்லுகிறது?
நாட்டின் அந்த‌
"பலசாலிக்கு"
ஒரு நாற்காலி போட்டுக்கொடுக்கும்
நன்றியையா?
நன்றியா? எப்படி?
என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
உங்கள் ஆத்மீகத்துக்கும்
அந்த "வேதாந்தத்துக்கும்" தான்
ஒரு முடிச்சு இருக்கிறதே!
தாமிரம் உருக்கும் அந்த ஆலை
தமிழர்களுக்கு
ஒரு "எலும்புருக்கி"நோய் ஆகிப்போனது.
பொருளாதாரம் என்ற பெயரில்
நாட்டின் வளமே சூறையாடப்படும் போது
நாடே சுடுகாடு ஆகும் என்பதை
நீங்கள்
உங்கள் கல்லா கட்டும் பாணியில்
சொன்னீர்கள்.
போராட்டம் போராட்டம் என்று
போராடிக்கொண்டிருந்தீர்கள் என்றால்
தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்றீர்களே!
அதில் தான்
உங்கள் "வெற்றிடத்தின் வேதாந்தம்" புரிகிறது.
எங்கள் கனிவான அன்பிற்குரிய‌
ரஜினி அவர்களே.
வெற்றிடத்தின் விஞ்ஞானம்
உங்களுக்கு புரிந்திருக்கும் என‌
நினைக்கின்றேன்.
இத்தாலியில் "டாரிசெல்லி" என்ற
விஞ்ஞானி
இரண்டு சிறிய "அரைக்கோள"
கிண்ண வடிவ அமைப்புகளை பொருத்தி
அதனுள்ளே
காற்றை எல்லாம் உறிஞ்சி
உள்ளே ஒரு "வெற்றிடம்" உருவாக்கினார்.
அந்த கிண்ண அமைப்புகளின்
இரு முனைகளிலும்
ஏழெட்டுக்குதிரைகளைப்பூட்டி
எதிர் எதிர் திசையில்
அவற்றை ஓடி இழுக்கச்செய்தார்.
அந்த கிண்ணங்களை
அந்த குதிரைகளால் பிரிக்கவே முடியவில்லை.
ஆம்.
சூழ்நிலையின் அழுத்த ஆற்றல்
அந்த கிண்ணங்களை
சூழ்ந்து அமுக்கிக்கொண்டு விட்டது.
அந்த "டாரிசெல்லி"வெற்றிடம்
இங்கே அடை படுவது
மக்கள் எழுச்சிகளால் தான்.
நீங்கள் அஞ்சும்
கஜா புயல்களின் கரு மையம்
அந்த வெற்றிடத்தில் தான்
கன்னிக்குடம் உடைக்கிறது.
அதனால் இந்த வெற்றிடம் பற்றி
நீங்கள்
கவலை கொள்ளத்தேவையே இல்லை.
சமுதாய முரண்பாடுகளே
இங்கு சித்தாந்தம் ஆகிறது.
அதுவே அரசியல் ஆற்றலின்
கரு மையம்.
அந்த வெற்றிடத்தில் கர்ப்பம் தரிப்பது
தமிழ் நாட்டில்
தமிழ் மக்களால்
கருவுயிர்க்கப்படும் போராட்டங்களே தான்.
அது தமிழைக் காப்பதற்கும் இருக்கலாம்.
அது திராவிடத்துக்கும் இருக்கலாம்.
இடை மறிப்பாய் உங்கள்
லஞ்ச லாவண்ய பையாஸ்கோப்புகளை
 "ஃபிலிம்"காட்டுவதில்
எந்த அர்த்தமும் இல்லை.
சமுதாய எழுச்சியின் அலைகளில்
அவை நிச்சயம் கழுவப்பட்டுவிடும்.
சில நீரவ் மோடி களின்
சட்டைப்பாக்கெட்டில் நம் வங்கிகள்
விழுங்கப்பட்டு விட்டனவே.
அந்த சமூகச் சுரண்டல்களின்
அநீதி உங்களுக்கு ஏன் புரியவில்லை?
ஆத்மீக ஆர்ப்பாட்டத்தில்
ஆண்டவனுக்கு
கும்பாபிஷேகம் பண்ணுவது கூட‌
லஞ்ச வடிவத்தின்
விஸ்வரூபம் தான்.
அந்த தந்திர யோகங்கள்
போதனை செய்ததே இந்த‌
சுயலாப புகைமூட்டங்கள் தான்.
சாதி மதங்கள்
அதனை முட்டுக்கொடுக்க‌
வந்தவை தான்.
இதை வெளிச்சம்  போட்டுக்  காட்டும்
பகுத்தறிவு கூட‌
"தேசவிரோதம்"
என்று தெறிக்கவிடும் கும்பல்களுக்கு
நீங்கள் குடைபிடிக்கும்
சதிகளில் சிக்கிவிடாதீர்கள் என்று
எங்கள் அன்பான ரஜினி அவர்களே
உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் "பேட்ட"த்துள்ளல்களில்
ஒரு ஆன்மீக ஐயப்பனின்
நிழல் உருவம் செய்து
அந்த வெற்றிடத்தை நிரப்பும்
வேலையில் மெனக்கிட வேண்டாம்
எங்கள் அன்பான ரஜினி அவர்களே!
பரமண்டலம் எனும் அறிவியல் வெளியில்
ஒரு காவிமண்டலத்துக்கு
கால் கோள் விழா நடத்துவது
உங்களுக்கு உகந்தது அல்ல.
"சோசியல் டைனாமிக்ஸ்"க்கு
மஞ்சள் குங்குமம் வைப்பதும்
உருத்திராட்ச மாலை
போட்டுக்கொள்வதும்
எங்கள்
தமிழ் இளைஞர்களுக்கு உரித்தானது அல்ல!
என்பதை புரிந்து கொண்டு
இந்த "வெற்றிட"ப்பாராயணத்தை
நிறுத்திக்கொள்ளுங்கள்
என்று
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறோம்
அன்பான ரஜினி அவர்களே.

======================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக