சனி, 8 டிசம்பர், 2018

"பொரிவிளங்கா"

"பொரிவிளங்கா"
=================================ருத்ரா இ பரமசிவன்


"வாயி வய்வு"
நரம்பு நைந்து
வாய் கோணிக்கொண்டதில்
தன் பேத்தி "வடிவை"
இப்படித்தான்
அவன் கூப்பிட்டு
அவள் சுருள் முடியை
தடவுகிறேன்
என்று சிக்கல் ஆக்குவான்.
ஆத்திரத்தில் ரெண்டு உப்புக்கல்
குறைந்தற்கு
கரண்டியோடு சாம்பாரை
தன் "நற் பாதி" (பெட்டர் ஹாஃப்)மீது
இப்படித்தான் மோதி அடிப்பான்.
அர்த்தநாரீஸ்வரன்
ஒரு கன்னத்தை
மறு கையால் இப்படித்தான்
அடித்துக்காட்டி
அன்பே சிவன் என்று
உலகுக்கு காட்டினானா?
தொண்டை மேட்டில்
தங்க பூண் பிடித்த‌
அந்த ருத்திராட்சக்கொட்டை
தாமஸ் ஆல்வா தந்துவிட்டுப்போன‌
கிராமஃபோன் காந்தஊசிக்கூடு போல‌
நடுங்கி நடுங்கி ஆடும்
அவன்
"நமச்சிவாயா"
என்று அரற்றும் போதெல்லாம்.
அம்ச்சீய்யா அம்ச்சீய்யா
என்று அவன் குழறுவது
அந்த "ந‌மச்சிவாயத்தை"தான்
பஞ்சாட்சரம்
பஞ்சடைந்த அவன் விழிகளில்
தண்ணீர் வடித்தது.

ஆத்திரமெல்லாம் வடிந்தபின்
அது
மூத்திரமாய்
கை வழி கால் வழி
வழியும் ஒரு
யாத்திரையின் விளிம்புக்கு
வந்து விட்டான்.
குழி விழுந்த அந்தக்கயிற்றுக்கட்டிலை
கோடரிகொண்டு துண்டாக்கி
தெருமுனையில் வீசப்போகும்
நாட்களை சந்திக்க‌
அவன் மீது மொய்க்கப்பொகும்
ஈக்களும் எறும்புகளும்
காத்துக்கொண்டிருக்கின்றன.

அவனுக்கு இன்று புரிகிறது.
கருப்புப்பிழம்பில் எல்லாம்
கருப்பாய் தான்
தெரிகிறது.
எத்தனை தெய்வங்கள்?
எத்தனை வேதங்கள் வசனங்கள்?
மனிதனுக்கு மனிதன் பரிமாறிக்கொள்ளும்
மானிட வாசனையை
அவன் முகர்ந்து பார்த்ததே இல்லை.
அதனால்
தன்னையே
பங்கு போட்டுக்கொண்டு வாழவந்த‌
மனைவியிடம் கூட‌
தன் அந்தரங்க திமிர்வாதத்தை
காட்டிக்க்கொண்டிருந்தான்.

படிகலிங்கத்துக்கு
பாலாபிஷேகம் செய்யும்போது
தானே எல்லாம்
என்ற மதர்ப்பு மட்டுமே
கற்பூரத்தீ முனையில் கரி பிடித்து நிற்கும்.
அன்று ஒரு நாள்
அந்த "சகதர்மிணி" அறியாமல்
அந்த பூஜையறை பக்கம் தலை காட்டி விட்டாள்.
வீட்டுக்கொல்லையில்
மாட்டுக்கொட்டத்தில்
சாணி நாற்றம் பிடித்துக்கொண்டு
"விலகியிருக்கும்" நாட்கள் அல்லவா அது?
எப்படி அங்கே அவள் வரலாம்?
கிணு கிணுவென்று அடித்துக்கொண்டிருந்த‌
பூஜை மணியை கோபமாய்
அவள் மீது விட்டெறிந்தான்.
அவள் நெற்றியில் ரத்தம் கொட கொடத்தது.

மேலே தொங்கிய‌
ரவிவர்மாவின் ஓவியத்தில்
சிவனும் பார்வதியும்
அருகே அருகே அணைத்துக்கொண்டு..
அந்த காட்சியில் கூட‌
தெயவ ஆலிங்கனத்தின்
ஒரு வியர்வை நாற்றம் வீசும்படி அல்லவா
அந்த ஓவிய மேதை
தூரிகை கொண்டு தூவி வைத்திருந்தான்.
ஆனாலும்
அவன் பக்தியின் உச்சம்
அங்கு அதீதமான ஒரு கவுச்சி வாடையைத்தான்
அங்கு நிரப்பியது.
அவள் அலறல் கண்டுகொள்ளப்படவேயில்லை.

இன்று
அவன் விழிமுன்னே
எதையோ கண்டு
மிரண்டு கிடக்கிறான்.
மெய்ப்பொருள் பொய்ப்பொருள்
எல்லாமே
சலமும் சளியுமாய்
கடல் பிளந்து காட்டுகிறது.
அது பாதையா?
அவனை விழுங்கும்
வாயா?

அவன் மிரண்டுகிடக்கிறான்.
பொருள் விளங்காப் பொருள் தேடி
பொய்யின்
பொடிப்பொடியாய் உதிர்ந்து கிடப்பதை
உணர்ந்து கொண்டானோ?
உணர்ந்ததை உரைக்க முடியவில்லை.

"பொய்விய்ங்கா..பொய்..பொய்விய்ங்கா பொய்.."
அந்தக்கிழவன்
குழறிக்கொண்டே இருக்கிறான்.
விடிந்தால் தீபாவளி..
வடை சட்டியில் எண்ணெயின் நுரைகள்
கொப்பளித்துக்கொண்டே இருக்கின்றன.

அன்பு பேத்தி ஓடி வருகிறாள்..
அந்த பொக்கைவாயில்
தீபாவளி பட்சணத்தை வைத்து
தின்னச்சொல்கிறாள்.
"பொரி விளங்கா தாத்தா
உங்களுக்கு பிடிச்ச‌
பொரி விளங்கா தாத்தா"
பேத்தி பரிந்து ஊட்டுகிறாள்.
"பொருள் விளங்கா பிறப்பின்
பொருளை
அந்தக்கிழவன் புரிந்து கொண்டானா?
தெரியவில்லை.
பேத்தியின் பிஞ்சுக்கைகளின் முன்
இந்த பிரபஞ்சமே வெறும் கந்தல் கூளம் தானோ ?
அவன் விழிகள் விறைத்தன.
அவன் தலை தொங்கிவிட்டது.
தூரத்தில் கேட்டது
பட்டாசு முழக்கம்.

=============================================================
22.10.2014







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக