புதன், 5 டிசம்பர், 2018

"பாறையில் ஒரு தேவதை"



(with Great Thanks for this LINK)


இந்த மன்றத்தில் ஓடி வரும்.....
====================================================ருத்ரா

எங்கோ பிறந்த காற்றே
இங்கு நீ வருடுவது
வரலாற்றின் தடங்களைத்தான்..
உன்னை உரித்து
அதனுள் அந்த காலத்தையும் உரித்து
உற்றுப்பார்த்த போது..
நூற்றாண்டுகளை உருட்டி உருட்டி பார்க்கும்
கலைடோஸ் சித்திரங்களாய் தெரியும்
அந்த லியொனார்டோ டா வின்ஸியின்
ஆத்மாவின் கரையோரங்களில்
எத்தனை எத்தனை
வைரத்திவலைகள்.?
அவன் விரல் வழியே
உமிழ்ந்த உயிர் கண்டு
அந்த தூரிகை கூட புல்லரிக்கும்.
அந்த சின்ன சின்ன மயிர்ச்சிலிர்ப்புகளுக்கும் தெரியும்
அது "ஆயில் வண்ணக்குழம்பு" அல்ல‌
அவன் கற்பனைக்குள்
கொப்புளித்த ரத்தம் என்று!
இதோ அந்த பளிங்கு லாவா.


"பாறையில் ஒரு தேவதை"
===============================

நான் நினைத்தேன்
அந்த நிலவையெல்லாம்
வடிகட்டி
அவள் முகத்தில் பார்க்கவேண்டும் என்று...

அந்த சொர்க்கம் எல்லாம்
உருகி
ஒளியின் இன்பத்திரட்சியை
அந்த கண்களில்
வழிய விடவேண்டும் என்று...

இருட்டு அவள் பின்னே
கவ்விப்பிடிக்க நினைத்த போதும்
முகம் கொட்டும் வெள்ளி அருவியில்
பார்வைகள் குளித்தன.
பார்வைகள் இனித்தன.
பார்வைகள் பனித்தன.

அவள் புருவ நெளிப்பில்
என் இதயம்
கூடு கட்டிக்கொண்டது.
எப்போது அந்த இமைகள் பட படக்கும்?
அந்த பொன்சிறகுகள்
என்னை கட்டிக்கொண்டு
ஒரு கனிவு உலகத்திற்கு
எப்போது கூட்டிச்செல்லும்?

இதழ்களின் அருகே
இழைவதற்கு மிகவும் நடுக்கம்.
எத்தனை சொற்கள்
என்னை புதைக்க அங்கே
சிதறிக்கிடக்குமோ?

சுருள் கூந்தலில்
எனை மொத்தமும் உறிஞ்சிக்கொள்ளும்
ஜெல்லி மீன் ஜரிகைத்துடிப்புகள்
என் உள்ளத்தை கூழாக்கி பிசைகிறது...

அப்போது தான்
முத்தம் கொடுத்திருக்கிறாள்..
வானத்துக்கு...
நாளைய சூரியனின் நெருப்புக்கன்னத்துக்கு..
போதும்..எனக்கு!
என் உயிரின்
வேர் அடியில்..வேர்த்தூவியில்...
சில்லிட்டு நிற்கிறேன்.
பிறப்பு எனும்
அந்த "பண்டோரா பேழையை"
இன்னும் நான்
திறந்து பார்க்க வில்லை..
பார்க்கவும் விரும்பவில்லை..

===========================================================ருத்ரா 
17.12.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக