ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வேட்டி கட்டு!வேட்டி கட்டு!

வேட்டி கட்டு!வேட்டி கட்டு!
===============================================ருத்ரா

இன்றைய ஜிகினாக் கதாநாயர்களுக்கு
மிகவும் தேவை
குத்துப்பாட்டும் குத்துவெட்டும் தான்.
வில்லன்களை அடித்துநொறுக்கும்
கதாநாயகர்கள்
"நீ பொறுக்கியென்றால்
நான் அதை விட பொறுக்கிடா"
என்று வில்லனைப்பார்த்து சொல்லுவது தான்
படம் முழுக்க உள்ள நரம்புகளில்
ஓடவேண்டும்.
அதுவே தான் அவன் பாடும் பாட்டில்
"தெறிக்க" வேண்டும்.
வில்லன் மாதிரியான கதாநாயகர்களே
இங்கு தேவை.
தயாரிப்பாளர்கள் சகிதம்
நட்சத்திர ஓட்டல் அறைகளில்
கதையை சமைக்கும்போதே
இப்படி கதையில்
ஒரு கவுச்சி அடிக்கவேண்டும்.
என்ற
கனமான "தீம்"
சொருகப்பட்டு விடுகிறது.
அதை மறைக்க வெளிநாட்டு
பனிமலைச்சிகரங்களில் "கொரியோகிராஃ பி"
மற்றும் வெள்ளை வெள்ளையாய்
கதாநாயகிகள்!
இசை அமைப்பு எனும்
பிரம்மாண்டம்
மெல்லிய மெலொடிகளை
ஓரம் கட்டிவிட்டு
நரம்புக்கருவிகளையும்
தோற்கருவிகளையும் கொண்டு
கம்பியூட்டரில்
அடித்துத் துவைத்து
அதை விளம்பரக்கொடியில்
அவ்வப்போது காயப்போடுவதே
இசை வெளியீட்டு விழா!
இந்த இலக்கணங்களுக்குள்
உட்பட்டு
நகரமெங்கும் ஒலித்துக்கொண்டிருப்பதே
"வேட்டி கட்டு!வேட்டி கட்டு!"
"அலப்பறை" "அடிதடி" களால்
சினிமாப்பாட்டு இலக்கியம்
ரொம்பவே நசுங்கிக்கிடக்கிறது.
"சேர சோழ‌
பாண்டிக்கெல்லாம்
வேட்டி கட்டு! வேட்டி கட்டு!"
ஆமாய்ங்க!
இவிய்ங்க தமிளனுங்க!
இவிய்ங்களுக்கு இப்டித்தாய்ங்க‌
எளுதணும்னு
பேனாவில் வேறு ஏதேனும் உள்ளெழுத்து
வைத்து எழுதியிருக்கிறார்களா
என்று தெரியவில்லை.
தமிழன் அல்லாதவனெல்லாம்
தமிழனுக்கு வேட்டி கட்ட‌
பாட்டு பாடும் அவலம்
இங்கே ஏன் நேர்ந்தது?
ஏனெனில்
சினிமா
போதனைக்கு வந்ததா?
போதைக்கு வந்ததா?
என்ற கேள்வியில் தான்
இன்னும்
தமிழன் மல்லாந்து கிடக்கிறான்.
"ஆளப்பொறாண்டா தமிழன்"
என்ற கொட்டு முழக்கமெல்லாம்
தேவையில்லை.
"சிந்திக்கப்போறாண்டா தமிழன்"
என்ற சொற்களுக்கே
அவன்
வெகு தொலைவு
போகவேண்டியிருக்கிறது.
அதற்கு
இந்த குத்தாட்டங்களா
அவன் மைல் கற்கள்?

===========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக