சனி, 8 டிசம்பர், 2018

உருண்டு விழுந்தது..

உருண்டு விழுந்தது..
===================================ருத்ரா

எனக்கு உயிர் இருக்கிறது.
ஆனால் வாய் இல்லை
வயிறு இல்லை.
அதனால் அதற்கு
நாளும் நான்
வாள் தீட்டத்தேவையில்லை.

எனக்குள் மூச்சுகள் இருக்கின்றன.
உங்கள்
மணிபூரகமும் ரேசகமும்
கும்பகமும்
மற்றும் பதஞ்சலிகளும்
இந்த பெருங்காய டப்பாவுக்குள்
அமுத அடைசல் தான்.
நான் மூச்சுகளின் கிட்டங்கி.

மூச்சுகள் உண்டு
பேச்சுகள்?
நாகப்பாம்புகளின்
மூச்சுகள் மட்டுமே உண்டு.
அது நெடிய நீண்ட ஏக்கம்!
கிலோக்கணக்கில்
அடைத்து வைத்த வெடிபொருளாய்
சொற்கள் உண்டு.
அந்த எழுத்துக்குள் கூட‌
ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்ன
கருந்துளையின்
கருவிழி உண்டு.
பிரஞ்சங்களை நான் பிரசவிக்க முடியும்.
இருப்பினும்
அந்த உதடுகள் இல்லை.
முத்தமிட முடியவில்லை.
எல்லோரும் அந்த தேனில்
திளைந்து கிடக்கிறார்களே!
அதன் ஒரு சொட்டையாவது
நான் நக்கிப்பார்க்க முடியுமா?
ஆம்.
காதல் எனும்
மூச்சுகளின் பிரளயம் அது.
என் குழாயை உருவிக்கொண்டு
அந்த மின்னலின் தொப்பூள் கொடியை
கொஞ்சம்
சொருகி விடுங்களேன்..
ம்ம்ம்...சீக்கிரம்
நான் முடியப்போகிறேன்...

.............

.......

சடாரென்று
ஒரு நர்ஸின் கவனக்குறைவால்
உருண்டு விழுந்தது
அந்த‌
ஆக்சிஜன் சிலிண்டர்.

================================================
24.08.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக