சனி, 8 டிசம்பர், 2018

வெள்ளைக்காகிதங்கள்

வெள்ளைக்காகிதங்கள்
===========================================ருத்ரா

ஒரு கட்டு கணினி காகிதங்கள்
என் மேஜையில்
காத்துக்கிடக்கின்றன.
உட்கார்ந்து ஒரு தாளை உருவி எடுத்து
மேஜையில் வைத்துக்கொண்டு
பேனாவை கையில்
உருட்டி உருட்டி யோசித்துக்கொண்டிருந்தேன்.
இன்னும்
அந்த சஹாரா பலைவனத்தில்
வெப்பம் மட்டுமே மூச்சு விட்டுக்கொண்டிருந்தது.
எங்கோ ஒட்டகங்களின்
அழிந்து போன காலடிச்சுவடுகள்
வரிசை வரிசையாய்.
எனக்கான அந்த "பாலைவனப்பசுஞ்சோலையை"
எட்டி எட்டி தேடுகிறேன்.
மூளித்தனமான தருணங்கள் உருள்கின்றன.
முகமெல்லாம் மணல் சிதறல்கள்.
எதை எழுதுவது?
கண்ணுக்கெட்டிய பாழ்வெளி
அலை வீசிக்கொண்டிருந்தது.

அந்த குட்டி மண்சுவரை ஒட்டிய‌
பூவரசமரத்தில்
ஒரு இலையை ஒடித்து
பீபீ செய்து கன்ன உப்ப‌
நாதஸ்வரம் வாசித்தேன்.
ஓசையும் வரவில்லை.
நாதமும் வரவில்லை.
சும்மா ஊதிக்கொண்டிருந்தேன்.
சோப்புக்குமிழி ஊதுவது போல்.
என் காத்திருப்பின் மெல்லிய சல்லாத்துணி
என்னை வாரி வாரி சுருட்டியது.
இந்த வழியாய் தானே
நீர்க்குடம் சுமந்து வருவாள்.
அந்த குட்டைப்பாவாடைக்கு கொஞ்சமும்
பொருந்தாத பெரிய குடம்.
இன்னும் வரவில்லை.
எனக்கும் இன்னமும் அதை
எழுதிப்பார்த்துக்கொண்டே இருக்கும்
தெம்பும் வரவில்லை.
தாகம் மட்டும் ஆயிரம் சஹாராவாய்
எதிரே விரிந்து கிடந்தது.
சிதை அடுக்கியது போல்
அந்த கட்டுக்காகிதங்கள் மேஜையில்.

==============================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக