புதன், 26 டிசம்பர், 2018

"கனா"வுக்குள் ஒரு கனவு



"கனா"வுக்குள் ஒரு கனவு
=======================================ருத்ரா


கிரிக்கெட் என்றால்
கம்பெனிக்காரர்கள் கொடுக்கிற‌
விளம்பர டி ஷர்ட்டுகளை
போட்டுக்கொண்டு
பனித்துண்டுகளை போட்டு
பருகும் குளிர்பானங்களில்
முத்து முத்துகளாய்
வியர்வை பூக்க‌
கிரிக்கெட் மட்டையை சுழற்றி
ஆறும் நாலுமாய்
விண்ணையும் மண்ணையும்
விண்டு காட்டி பந்துகள் அடிக்கும்
சாகசம் என்பது நமக்குத்தெரியும்.
ஆனால் ஒரு ஐஸ்வர்யா ராஜேஷை
 "கேல் ரத்னா" விருது வந்து
முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும்
அளவுக்கு சுடர் பூக்க வைத்த‌
இயக்குநருக்கு கனமான கைதட்டல்கள்.
சினிமா என்றால் அதன் எல்லை
குத்தாட்டம் தான் என்பதை அடித்து நொறுக்கி
மரக்கட்டையான கிரிக்கெட் பேட்டிலும்
உயிர்பூசி பேசவைத்த ஐஸ்வர்யாவின்
நடிப்புக்கு மணிமகுடம் சூட்ட வேண்டும்.
இன்னொரு ஆச்சரியம்!
அந்த மேட்ச் என்ன‌
ஸ்போர்ட்ஸ் மீடியாக்களில் நடக்கும்
லைவ் மேட்சா என்ன?
"போலி அசலையே போலி ஆக்கிவிட்டதோ
எனும் அளவுக்கு
யதார்த்தமான விறுவிறுப்பு
தியேட்டர் முழுவதும் தொற்றிக்கொண்டது.
அடுத்து
வீரதமிழ் மகன் "சத்யராஜ்" நடிப்பு
ஒரு சிகரம் எட்டியிருக்கிறது.
விண்ணையே சுரண்டி சவால் விடும்
உயரம் அவருடையது!
தமிழ்நாட்டு விவசாயி
நைந்து கந்தலாகி
அல்லல் பட்டு ஆற்றாத அழுதகண்ணீர்
எனும்
எரிமலைத்திரவமாய்
வழிய நிற்பதன் வடிவத்துள்
கிழிந்து போன இந்திய மேப்பை
நரம்பு அறுந்த வீணையாய்
நமக்குக்காட்டுகிறார்.
ஏழை விவசாயி மகள் விளையாடும்
கிரிக்கெட்டில்
வயற்காட்டின் குமுறல்களும்
குமிழியிடுகிறது.

அமைதிப்படை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
வால்டர் வெற்றிவேல்
ஜல்லிக்கட்டு
வேதம் புதிது
கடலோரக்கவிதைகள்
லேட்டஸ்டாய் பாகுபலி..

இவையெல்லாம்
இவருக்கு விருதுகள் தர
தகுதியாய் இருந்த போதும்
அந்த "வீரத்தமிழன்" தான்
அலர்ஜியாகி தடுக்கிறது.
தமிழன்களின் இந்த அவலம் தீர
இந்திய மண்ணின் அரசியலில்
ஒரு புதிய பரிணாமம் அல்லவா
வேண்டியிருக்கிறது!
"கனா " வுக்குள் ஒரு கனவு இது.

கஸ்தூரி மான்
தன்னிடமிருந்து தான்
அந்த மணம் வருகிறது என
தெரியாமல்
அந்த மணம் தேடி
 ஒட்டிக்கொண்திருக்குமாம்.
சிவகார்த்திகேயன்  எனும்
சிறந்த தயாரிப்பாளரை
தன்னுள்  வைத்துக்கொண்டே தான்
ஒரு சிறந்த நடிகர் எனும்
ராஜ பாட்டையில்
இது வரை ஓடிக்கொண்டே
இருந்திருக்கிறார் அவர்.
கிரிக்கெட்டையும்
விவசாயிகளின் பிரச்னையையும்
சரியான கலவையில்
தந்திருக்கிறார்.
கிராமங்கள்
சரியான விவசாயம் இல்லாமல்
மொட்டை மைதானமாய்
போகும் ஆபத்தை
உட்குறிப்பாக்கி இருக்கிறார்கள் போலும்.
அதற்குப்பதில்
கிரிக்கெட் மட்டையும் பந்துமாய் 
உழவு மாடும்
விவசாயிகளின் கண்ணீருமாய்
அவை திரையை ஆக்கிரமித்து
"சிக்ஸும் ஃபோருமாய்"
விளாசுகின்றன.

சிவகார்த்திகேயன் தன்
கலைப்படைப்பில்
நிமிர்ந்து நிற்கிறார்.

=========================================













1 கருத்து:

vimalanperali சொன்னது…

நல்ல விமர்சனம்.நன்றி!

கருத்துரையிடுக