சனி, 15 டிசம்பர், 2018

பொமரேனியன்

பொமரேனியன்
==============================================ருத்ரா


என்ன புசு புசுப்பு?
என்ன வழ வழப்பு?
சொன்னல் சொல்படி
கேட்டுக்கொண்டு
என் காலடியில்
கிச்சு கிச்சு மூட்டும்படி
புகுந்து கிடக்கிறாய்.
ஒரு சின்ன எலும்புத்துண்டு
உன் மீது
நான் பாய்ச்சும் மந்திரக்கோல்.
எனக்காக‌
உன் பட்டு நாக்கை
தொங்கப் போட்டு
நீர் வழிய நீர் வழிய‌
என்னை பாசத்துடன்
வலம் வருகிறாய்.
நீ எனக்கு
அலங்காரம்.
நீ எனக்கு
சமுதாய அந்தஸ்து.
உன்னை வைத்து
அந்த படாடோபத்தில் தான்
என் வியாபாரம்
வசூல் எல்லாம்.
உனக்கு எறியும் கறித்துண்டுகள்
எனக்கு கோடி கோடிகள்.
பந்தை தூர எறிந்தால்
போய் கவ்வி வந்து எனக்கு
கொடுப்பது என்பதை
எப்படி உன் ரத்த அணுக்களில்
ஊற வைத்திருக்கிறேன் தெரியுமா?
அப்படித்தான்
உன் அடிமைப்பணி
என்னை
இந்த அதிகார உயரத்தில்
ஏற்றி இருக்கிறது.
தேதி அறிவித்தால் போதுமே
எல்லா ஓட்டுக்களையும் கவ்விக்கொண்டு
எனக்கு சமர்ப்பித்து
மகுடம் சூட்டி விடுவாயே.

"உர்..உர்..உர்"
உனக்கு இன்றைக்கு என்ன வந்தது?
அதோ
உன் பயங்கரமான கோரைப்பல்
தாடையை விலக்கி
என்னைக்கிழிக்கத்துடிப்பது போல்
எகிறுகிறது.
"ஏய் ஏய்..
சங்கிலியால் நன்றாக இழுத்துக்கட்டு"
சேவகனிடம் கத்தினேன்.
என் மீதா பாயத்துடிக்கிறாய்?
உன்னை அடக்க‌
ஆயிரம் சட்டங்கள் ஷரத்துக்கள்
என்னிடம் உண்டு.
இருந்தாலும்
அதன் சிறு சிறு கரு கரு
பளிங்குக்கண்கள்
எப்படி அக்கினி வீசும்
கனல் துண்டுகள் ஆகின?
"டாக்டர்
வேறு என்ன செய்யலாம்?
மலையாள ஜோஸ்யர்களை வரவழைத்து
ப்ரசன்னம் பார்க்கலாமா?
காளிக்கு யாகம் நடத்தி
அதில் பட்டுப்புடவைகள் மிளகாய் வத்தல்கள்
ஆகுதியாய் கொட்டலாமா?
இந்த வீட்டில் முந்தி இருந்தவர்கள்
இப்படித்தான் செய்திருக்கிறார்கள்"

"இப்படியே நீங்கள் பேசிக்கொண்டு
இருந்தால்
உங்களுக்கும் சங்கிலியுடன்
ஒரு தனியறை வேண்டியிருக்கும்"
டாக்டர் சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
நான்
அதன் கண்களையே பார்த்தேன்.
திகில் அடைந்து
மலையாள ஜோஸ்யருக்கு
ஃபோன் செய்தேன்.
"ஹலோ" என்பதற்குள்
தீச்சுவாலைகளின்
சுநாமிக்குள்
அகப்பட்டவன் போல் ஆனேன்.
அது என் மீது பாய்ந்து..
நான் மிச்சம் இல்லாமல்
அடையாளம் இல்லாமல்
காணாமல் போய்விட்டேன்.

====================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக