என்ன தேடுகிறாய்?
கனவுகளையா?
கண்களையா?
காட்சிகளில் தெளிய மறுக்கிற
உண்மைகளை
எதிலிருந்து வடிகட்டப்போகிறாய்?
காகங்களுக்கு
வித்தியாசங்களைப்பற்றிக்
கவலையில்லை.
தாகமே அதனுள் எரியும் தீ.
அதை தணிக்க
அந்த சாடித்தண்ணீரை
மேலே கொண்டுவர
அதற்கு
மாணிக்கக்கற்களும்
கூழாங்கற்களும் ஒன்று தான்.
விளம்பர சூதாட்டங்களில்
பகடை உருட்டி ஆடும்
சந்தைப்பொருளாதாரம்
சந்தியில் இறைந்து கிடக்கும்
பொய்மைப்பொருளாதாரம் ஆகிப்போனது.
பசித்தவர்கள் பசித்தவர்களே
நோயுற்றவர்கள் நோயுற்றவர்களே.
வலுவற்றவர்கள் மிகவும்
வலுவற்றுப்போன
எருக்கம் மேட்டு குப்பைகளே.
சமுதாய ஓர்மையுடன்
சிந்திக்க மறந்தவர்களும்
சிந்திக்க மறுத்தவர்களும்
செய்கின்ற கணினி உருட்டுகளில்
வரலாற்றுத்தடங்கள்
அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.
விழித்துக்கொள்
விழித்துக்கொள் என்று
நிழல் சித்திரங்கள் காட்டுவதில்
பயனேதும் இல்லை.
வருவது வரட்டும்.
கவலை இல்லை.
_____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக