திங்கள், 16 செப்டம்பர், 2024

வாசல்.

 


வாசல்.

_____________________________________


விழிக்கும் முன் 

வானம்

உங்கள் உள்ளங்கையில் 

ஒரு போன்சாய்.

நீண்ட கெட்டித்தட்டிப் போன‌

இருட்டுக்குழம்பில்

உரு ஏந்தி வரும்

பிண்டங்களுக்கு

உன் 

இலக்கியங்களையும் 

இலக்கணங்களையும்

சமைத்துக்கொடு.

மனிதக்கருவின் காய்

கனிந்து வர‌

உன் அறிவையும் 

நுண்மாண் நுழைபுலத்தையும்

பதியம் இட்டுக்கொடு.

ஒரு மனிதன்

எல்லா மனிதனையும்

தன் வட்டத்துள் கொண்டுவரக்

கிளம்பும் 

வெறித்தனமான மந்திரக்கூச்சல்களின்

குறுகிப்போன மூளையின் காய்ச்சல்

சாதிகளாக 

பூதம் காட்டுவதை முதலில்

அழித்து ஒழிக்க வேண்டும்.

மனித நேயம் அடர்ந்து செழிக்கும்

மனக்காடுகளே

தண்ணிழல் தரும்.

அறிவின் குரல்கள் 

அழகிய அதிர்வு எண்களின் 

பண்களும் அமைத்துத்தரும்.

மற்ற சுடுகாடுகளுக்கு

கொள்ளிக்குடம் சுமக்க வைக்கும்

தாந்த்ரீக தகடுகளை

தட்டி நொறுக்கும்

சம்மட்டிகள்

உன் குவாண்டம் கம்பியூட்டிங்

வியப்புகளில்

வித்தைகள் கோர்த்த வியூகங்களாய்

வாசல் திறந்து வரவேற்கின்றன.

இதை தவறவிட்டால்

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கூட‌

நீ

இருட்டையே தின்று 

இருட்டிலேயே நெளியும் 

புழுக்களாய்த் தான்

பூஜை செய்ய காத்துக்கிடக்கவேண்டும்.


__________________________________________

சொற்கீரன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக