எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்
என்று
குதிரையில் கதாநாயகியை
உட்காரவைத்துக்கொண்டு
கேட்டவரின் கேள்வி
இன்னும் அந்த கோடம்பாக்கத்து
ஜிகினாத்தோட்டத்தில்
மின்னட்டம்பூச்சிகளைத்
தூவிக்கொண்டிருக்கிறது.
சித்தாந்தங்கள் பாஷ்யங்கள்
ஸ்லோகங்கள் தேவ வசனங்கள்
புறாக் கூடுகளிலிருந்து
பக்கூம் பக்கூம் என்று வரும்
இறைவர்களின் மொழிபெயர்ப்புகள்
எதுவும்
எந்த சின்னத்துரும்பைக்கூட
கிள்ளிப்போடவில்லை.
இருப்பினும்
கையகல நாடுகளுக்கு
கொடியேற்றி
ஏவுகணைகள் மூலம்
மரண மழை தூவி
மனிதம் எனும்
ஒளிச்சுடரையே கசாப்பு செய்து
விளையாடும்
போட்டிப்பொருளாதாரத்தை
வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறோம்?
மனிதக்கருவையும்
ஏ ஐ களின் க்ருப்பையில்
அடைகாத்து
செய்யும் சிலிகான் கூடுகளில்
மடங்கிப்போகவா
மனிதன் இங்கே வந்தான்?
இது கேள்வியல்ல.
எரிமலைகளின்
அக்கினிக்குழம்பில்
எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்
புது யுகத்தின்
மனித சிந்தனைப்படிமங்கள்.
சிந்தனை என்பது
ரத்த சதையல்ல
தின்று வயிறு புடைத்துக்கொள்வதற்கு.
ஒரு உந்து விசை.
பேரண்டமே சிறகு விரிக்கும்
அறிவின்
பெரும்பறவை.
பற..பற மனிதனே!
பிற..பிற மனிதனாகவே..பிற!
கடவுள்கள் நம்மிடம் கற்பதற்கு
காத்திருக்கட்டும்!
_____________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக