திங்கள், 16 செப்டம்பர், 2024

உருவெளி மயக்கம்

 

உருவெளி மயக்கம்

________________________________________



மிளகாய்வத்தல் பூச்சி என்பார்கள்

கரப்பான் பூச்சியை.

பரிணாமக்கோட்பாட்டுக்கு

பில்லியன் ஆண்டு நட்பு உடையது.

அது

விறு விறு என்று

சுவரின் மேல் ஏறியது.

நேரே சிவன் படம்.

தன் அன்டெனா மீசையை

சிவனின் கழுத்துப்பாம்போடு 

பொருத்திக்கொண்டு

தேய் தேய் என்று தேய்த்தது.

அது சிவனோடு கிசு கிசுத்துக்கொள்கிறது

என்று எடுத்துக்கொள்ளலாம்.

எனன உரையாடல்?

மனிதன் இப்போதானே தோன்றினான்.

அப்புறம் அவனுக்கு

கதை விடத் தெரிந்ததற்கு 

அப்புறம் தானே

இந்த புராணமும் பாட்டும்

சப்பளாக்கட்டைகளும்.

அப்படியென்றால்

உனக்கு முந்தி தானே நான்.

என்ன நான் சொல்கிறது புரிகிறதா?

பூச்சியா அப்படி அதட்டுவது?

உன் தர்க்க சாஸ்திரப்படியே

எனக்கு அப்புறம் வந்த நீ

எப்படி என்னைப்படைத்திருப்பாய்?

அப்ப‌

நான் தான் உன் கடவுள்..

சரி தானே!

சரி தான்.

சிவன் புன்முறுவல் பூத்துவிட்டார்.

வழக்கம் போல்

அந்த வீட்டுக்காரர் 

சந்தியா வந்தனம் பண்ணிவிட்டு

பூஜை செய்து

தீபம் காட்ட‌

சிவனின் படத்தின் முன் வந்து 

நின்றார்

திடுக்கிட்டார்

எதேதோ அலறிய வண்ணம்

படுக்கையில் தொப்பென்று விழுந்தார்.

அது எப்படி

சிவன் படத்தில்

ஏதோ ஒரு ராட்சசன் 

மீசையை பயங்கரமாய்

அசைத்துக்கொண்டு...

அந்தப்படம்..அந்தப்படம்

என்று அவர்

கை நீட்டிக் காட்டிகொண்டே

இருந்தார்.

முகம் வெளிறி 

விழிகள் துருத்திக்கொண்டு..

அதிலிருந்து ஒரு

கரப்பான் பூச்சி சிறகு பரப்பி

முட்கால்களை உரசிக்கொண்டு

பறந்து ஓடியது.

வீட்டில் உள்ளவர்கள்

ஃபோன் செய்ய ஓடினார்கள்.

மருத்துவருக்கா?

மந்திர வாதிக்கா?


__________________________________________________

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக