மடல்
________________________________
சொற்கீரன்.
என்னை உனக்கு அறிமுகப்படுத்த..
கூச்சமின்றி
நான் அருவியாக உன் உச்சி மீதிலிருந்து
பளிங்கு விழுதுகளாக விழுந்து கொள்ள...
என் கனவு எனும் சல்லாத்துணியால்
உன் முகத்திரையாய் காற்றில்
அசைந்தாட...
உன் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும்
என் இதயத்துடிப்பில்
பல்லாங்குழிகளாகி அதில்
என்னை நான் நிரப்பிக்கொள்ள...
என் படபடக்கும் மின்னட்டாம்பூச்சிகளை
உன் மனச்சிமிழில் விட்டுப்பார்த்து
அதை ரசித்துக்கொண்டே இருக்க...
உன் இமை அதிர்வுகளில்
அந்த சந்திர சூரியர்கள் பொடி பொடியாகி
உதிர்ந்து விழும்போது
அவற்றைக்கையில் ஏந்தி
அந்த ஒளித்தடாகத்தில்
உன் பிம்பம் பார்க்க..
வேண்டும் என்று தான் இக்கடிதம்.
இப்படிக்கு
பதில் மடல் பெறக்
காத்திருக்கும்...
ஆகா..அருமை.
என்று ஸ்டாம்பை நாக்கில் தொட்டு
கடிதம் போட்டுவிட்டேன்.
மறுநாளே மடல் வந்தது.
"எந்த மொழியில் எழுதியிருக்கிறீர்கள்.
தமிழில் மொழி பெயர்த்து
மறுபடியும் அனுப்புங்கள்.."
இப்படிக்கு
உங்கள் என்று இன்னும்
எழுதத்தயங்கும்...
ஒரு இவள்.
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக