திங்கள், 30 செப்டம்பர், 2024

தமிழனே!தமிழனே!

    தமிழனே!தமிழனே!

இப்படித்தான் அழைத்தேன்
அந்த கண்ணாடிச்சிறகுத்தும்பியை
அது அந்தக் குறுந்தொகையிலிருந்து
"கல் பொரு சிறு நுரையை"
சிறக்கடித்து சொல்லிவிட்டு சென்றது.
அந்த பட்டாம்பூச்சியைப் பார்த்தேன்.
பார்த்தவுடனேயே
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
என்று
அந்த வண்ணச்சிறகுகளை
"சப்பாணி"கொட்டிக்கொண்டே நகர்ந்தது.
நத்தை ஒன்று ஊர்ந்து சென்றது
நலமா என்று கேட்டேன்.
"நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளது...
என்று
நம் வாழ்க்கையை தோலுரித்துக்காட்டியது.
அந்த வீட்டு முற்றத்துப் பசும்புல்லில்
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
அந்த பூந்தன்றல் சொன்னது
இந்த "அணிலாடு முன்றிலில்"
என் தோழன் அணிலை இன்னும் காணோமே
என்று ஏக்கத்தோடு சொன்னது.
அப்புறம்
என் மீது மோதாத குறையாய்
ஒரு தமிழன் இடித்து விட்டுச்சென்றான்.
"வழி விடப்பா.
இன்று அங்கே கோயில் கும்பாபிஷேகம்
அபிஷேக ஜலம் தெளித்துவிடுவார்கள்
சீக்கிரம் போகவேண்டும்.."
என்றான்.
தமிழ் கண்ணீர் விட்டது.
என்னை மிதித்து கூழாக்கி விட்ட‌
அந்த ஆதிக்கக்கூச்சல் மொழியின்
எச்சில் நீரில் குளிக்கவா போகிறாய்?
ஓ தமிழா?
தமிழனே!தமிழனே!
இன்பத்தமிழை ஒலிக்க விடாமல்
உன் குரல்வளையில்
மாட்டி விடப்பட்டிருக்கும்
அடிமைச்சங்கிலியை
எப்போது அறுத்தெறியப்போகிறாய்?
___________________________________________
சொற்கீரன்.
கலிஃபோர்னியா
30.09.2024
காலை 07.09.2024
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக