சுவடிகள்.
_______________________________
ஏதோ எனக்கு ஒன்றும் தெரியாது
என்று அந்த
நாரதன்
மரா மரா என்று சொல்லு
என்றானே.
ராமன் மனிதன் இல்லை
மரம் தான் என்று
எனக்கு எப்போதோ தெரிந்து
விட்டது.
ராமன் வேறு சீதை வேறு
என்று நான்
எழுத்தாணி கிறுக்கியதில்லை.
நான் வேறு அவள் வேறு
என்று அவளை
தீக்குளிக்கச்சொன்னானே
அப்போது
அவன் மரம் தான் என்றே
உணர்ந்து கொண்டேன்.
இறைவன் அவதாரம் எடுத்தபோதும்
தர்ப்பைப் புல்காரன் அல்லவா
இறைவனையும் கூட
ஆட்டிப்படைக்கின்றான்.
நீ எனக்கு கீழே தான்.
நான் சொல்வதே தர்மம்.
உன் மனைவி தீக்குளிக்கவேண்டிய்வள்
என்று தாடியை உருவிக்கொண்டே
அந்த இறைவனையும்
தன் அகங்காரத்திற்கு
இரையாக்கிக்கொண்டானே.
இறைவனும் கூட
பிராமணர்கள் பிசைந்து செய்த
மண்ணுப்பாண்டம் தான்
என்பதே
வேதங்களுக்கெல்லாம்
ரகசிய வேதமாக இருப்பது.
நான்மறை அலப்பறைகள்
வெறும் ஜால்ரா சத்தங்களே.
வால்மீகிக்கு
ராமாயணம் புரிந்து விட்ட பிறகு
அவன் தீண்டத்தகாத சாதியாகி
வெளியில் நின்றான்.
இன்னும் அவன் வெளியில் தான்
இருக்கிறான்,
அவனது சுவடிகள் மட்டுமே
அந்த பளிங்கு பீடத்தில்.
_________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக