திங்கள், 9 செப்டம்பர், 2024

...வெகு தூரமில்லை.

 ...வெகு தூரமில்லை.

_____________________________________


வாராய்..நீ...வாராய்...

அந்த இனிமையான கார்வை

எத்தனையோ மில்லியன்

ஒளியாண்டுகளை

அடித்து நொறுக்கிக்கொண்டு

ந‌ட்சத்திரங்களின் பொடி தூவி

மழை பெய்கிறது.

இசையில் நனைந்து

இதயம் விம்மியது.

வாராய் என்று தினமும்

கூப்பிடத்தான் செய்கிறது.

அந்த தங்க அழைப்புகளில்

வாழ்க்கையின் மிச்சம் யாவும்

வடிந்து போயும் 

வசந்தம் "ஹம்மிங்" செய்கிறது.

ஒரு அமரர் ஊர்தி

போகும் இடம் வெகுதூரமில்லை

என்று

எல்லா மைல்கற்களையும்

பிடுங்கி எறிந்து விட்டு

மனப்பிழம்பில் புதைந்திருக்கும்

வெளிச்ச விழுதுகளை

ஊஞ்சல் கட்டித்தருகிறது.

சினிமாவின் ஓட்டத்தில்

தத்துவக்களஞ்சியங்கள்

அரிதாரம் பூசிக்கொண்டு

கடவுளுக்கே பெப்பே காட்டுகிறது.

மூச்சு தானே வேண்டும்.

பிடித்துக்கொள்.

நான் எத்தனையோ கற்பனை செய்து

வைத்திருப்பதைப்பார்.

அந்த கலைடோஸ்கோப்புக்குள்

செதில் செதிலாய்

கடவுளின் வர்ணத்துண்டுகள்

வெளியேற வழியின்றி

மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்றன.

சும்மா..சும்மா

அந்த நாலு வர்ண கிலுகிலுப்பையை

நிறுத்தடா மனிதா...

தூரமும் இடமும்

மறைந்து போய்

நம் சடங்குகள் கொண்டு வந்து

நிறுத்தியிருக்கும்

மூத்திர சந்தில் 

வாஸ்து பார்த்து வாழைமரம்

நட்டி வை.

தோரணங்களும் தொங்கட்டும்.

கனவுச்சடலங்களும் 

சவப்பெட்டியின் லாக்கருக்குள்

பத்திரமாக இருக்கட்டும்.

மனிதத்தின் பிறப்பும் இறப்பும்

பூட்டு சாவிகளாய்

கலகலப்பு 

காட்டிக்கொண்டிருக்கட்டும்.

ஆடுவோம் வா!

கபாலங்களும்

குத்தாட்டங்களுக்கு 

காத்துக்கொண்டிருக்கின்றன.


_______________________________________________‍

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக