திங்கள், 30 செப்டம்பர், 2024

பொம்மை சொர்க்கம்.

 

விஷ்ணுவுக்கு புரியாத ஒரு "சஹஸ்ரநாமம்"

________________________________________________


"பாவ புண்ணியம் பேசுவதே பாவம்.

பாவ புண்ணியம் பேசாததே புண்ணியம்.

உன் ஸ்லோகங்களையெல்லாம் 

கேட்டுவிட்டுத் தான்

நான் சாப்பிடப்போகிறேன் அல்லது

படுக்கப்போகிறேன்

என்று உனக்கு

யார் சொன்னது.?

நான் கடவுளாய் இருப்பது

பாவமா?

புண்ணியமா?

இன்னும் தீர்ப்பு வெளியாக வில்லை.

இந்த மனிதன் தான்

அந்த மரசுத்தியல் வைத்து

அடித்து அடித்து

ஒழுங்கு படுத்த வேண்டும்

நீ

நாலு என்ன‌

நாப்பத்தெட்டு ஆயிரம் வேதங்களை

வேண்டுமானாலும் வைத்துக்கொள்.

ஆயிரம் ஆயிரம் வர்ணங்களை

வெள்ளையடிப்பதாய் சொல்லிக்கொண்டு

இருட்டுப்பிழம்பில் விழுந்து

ஊறிக்கொள்.

எனக்கு எந்தவிதமான‌ 

சின்ன  எறும்புக்கடி கூட இல்லை."

"இப்படியே நல்லவன் போல‌

பேசிக்கொண்டிரு."

"என்ன? யார் பேசறது?

என் அருகில் இருக்கும் அம்பாளா பேசுகிறாள்?"

"அம்பாள் எந்தக்காலத்தில் அய்யா பேசினாள்.

எல்லாம் நான் தான்

அதாவது மனிதன் தான் பேசுகிறேன்.

பாற்கடல் கடைந்த விளையாட்டை வைத்து

தேவனுக்கு ஒரு நியாயம்

அசுரனுக்கு ஒரு நியாயம் 

செய்தாயே.

தேவர்கள் புண்ணியர்கள் என்றால்

எல்லோரையும் 

புண்ணியர்களாய்ப்படைத்து

எலோரையும் தேவர்கள் 

ஆக்கி விட வேண்டியது தானே.

நீ பரம்பொருள்.

எல்லா உயிரிலும் மயிரிலும்

மரம் மட்டையிலும் தான் இருக்கிறாய்.

சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்

என்று

பாஷ்யம் சொன்னாலும்

99.999999 சதவீத மக்களை

பசியில் பிணியில்

அடிமையாக வைத்திருக்கும் 

உரிமையை உனக்கு

யார் கொடுத்தார்கள்?

அதனால்

பரந்து கெடுக உலகியற்றியான்

என்று

வள்ளுவன் ஆவேசமாக சொன்னான்.

உன் பாவ புண்ணிய கணக்கை வைத்து

எங்களை ஏமாற்றியது போதும்.

எப்போதுமே பிராமணனாக பிறப்பவன் 

மட்டும் தான் உன் குழந்தை

என்று 

புராணம் எழுதிக்கொண்டவர்கள் 

உன்னையும் கூட‌

சூத்திரனாக பஞ்சமனாக தான்

ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

சிவனைக் கும்பிடுபவர்களெல்லாம்

இவர்களுக்கு

"பிரேத வழிபாட்டுக்காரர்கள்" தான்.

ஆம்.

கடவுள் என்றும் கோயில் என்றும்

ஒன்றும் கிடையாது எங்களுக்கு

நாங்கள் தான் சுத்தமான ஸ்மார்த்தர்கள் 

என்று பேசும் நாத்திகம் மட்டும்

சமஸ்கிருதத்தில் சொல்லிவிட்டால்

உனக்கு இனிக்குமா?


உன்னை

அவர்கள் பிழைப்புக்கு மூலதனம் 

ஆக்கிக்கொண்டு

"கடவுள் மாஃபியா"வாக‌

நீ இருந்தால்

அந்த முதலாளித்துவ கடவுள்

எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

நீ நீயில்லை.

அதாவது

நீ கடவுள் இல்லை.

அல்லது 

மொத்தமாக கடவுளே இல்லை.

இப்படிச்சொல்லும் 

மொத்த பாவாத்மாவாக

மனிதன் எப்போது மாறுகிறானோ

அப்போதே

நிஜ சொர்க்கம் அவன் கையில் 

வேண்டாம் உன் 

பொம்மையான பொய்மை சொர்க்கம்.

___________________________________________

செங்கீரன்









 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக